Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு பகுதியில் 15 வயது சிறுவன் சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த வெண்ணிலா, அவரது மூன்று மகன்கள் மற்றும் சகோதரர் வினோத் ஆகியோர், முருகம்பட்டு பகுதியில் ஆட்டுப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வந்த முருகனிடம் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) சரியாக ஆடுகளை மேய்க்கவில்லை எனக் கூறி, பண்ணை உரிமையாளர் முருகன் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் சிறுவன் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை மறைப்பதற்காக வினோத்தின் உதவியுடன் பண்ணை வளாகத்திற்கு அருகே குழி தோண்டி உடலை புதைத்துள்ளனர். மேலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் புதைக்கப்பட்ட இடத்தின் மீது சிமெண்ட் தளம் அமைத்து மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கொலை சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க, சிறுவனின் தாய் வெண்ணிலா மற்றும் அவரது மற்ற இரு குழந்தைகளையும் கடந்த நான்கு மாதங்களாக பண்ணையிலேயே சட்டவிரோதமாக அடைத்து வைத்து முருகனும் வினோத்தும் சேர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  தனியாக இருந்த பெண்ணுக்கு குறி வைத்த 22 வயது இளைஞர்கள்! நடுங்க வைத்த ராசிபுரம் சம்பவம்!

இந்நிலையில், கடந்த ஜூன் 10ஆம் தேதி வெண்ணிலா அந்தப் பண்ணையில் இருந்து தப்பித்து வந்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டுப்பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் அவரது கூட்டாளி வினோத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் சுரேஷ் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் உடலை தோண்டி எடுக்கும் பணியிலும், அடுத்தகட்ட விசாரணையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவன் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்டதுடன், சம்பவத்தை மறைப்பதற்காக அவரது தாய் மற்றும் குழந்தைகள் பல மாதங்களாக சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago