லதா ரஜினிகாந்தின் கடந்த கால நீதிமன்ற வழக்குகள், வாடகை பாக்கிகள் மற்றும் அண்ணாமலை – ரஜினி இடையேயான அரசியல் தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, இந்த புதிய மக்கள் இயக்கத்தின் பின்னணியில் பெரிய அதிகார மையங்களின் கட்டளை என மூத்தா பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில், ”எந்தப் பக்கத்தில் இருந்து எப்ப அம்பு வரும்? அந்த அம்பு யாரால், எதற்காக அனுப்பப்படுகிறது? என்பதில் கொஞ்சம் நாம் கவனம் வைப்போம். மக்கள் மேடையாம்! மக்கள் சேவைக்கான இயக்கமாம். தலைவர்களை உருவாக்கப் போறாங்களாம்… சொல்பவர்களின் யோக்கியதையை பொறுத்து தான் சொல்லப்படும் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும்.
இதென்னப்பா! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளது. பின்ன? லதா ரஜினிகாந்த் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கிறாங்கன்னா பேரதிர்ச்சி ஏற்படாதா? சில பேரோட நேச்சரே மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி வாழ்வதாக இருக்கும். அவங்களுக்கு இரக்கம் என்பதே இருக்காது. எப்பவும், பணம், புகழ், சொத்து, சுகம் இதிலேயே குறியாக இருப்பாங்க. அதற்காக தங்களை சுற்றி உள்ளவங்களை எப்போதும் இம்சித்துக் கொண்டே இருப்பாங்க. இந்த இலக்கணத்துக்கு 100 சதவிகிதம் பொருந்தி வரக் கூடியவர் தான் லதா ரஜினிகாந்த்.
இந்தக் கட்டுரையில் அடுத்தடுத்து நான் குறிப்பிடும் எவையுமே சாவித்திரி கண்ணனாகிய என்னோட புதிய ஆய்வுகளோ, கண்டுபிடிப்புகளோ அல்ல. இவை பத்திரிகை மற்றும் சினிமா தொடர்பில் உள்ள சகலருக்கும் தெரிந்த செய்தியே. இந்தம்மா எப்படிப்பட்டவங்க? என்பதற்கு இவங்களோட கடந்த கால நடவடிக்கைகளே சாட்சியாகும். நான் இங்கே குறிப்பிடுவவை எல்லாமே உண்மைகளின் சிறு துளிகள்;
ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக இவர் நடத்திய ட்ராவல் எக்ஸ்சேன்ச் இந்தியா என்ற நிறுவனத்திற்காக மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கியை கட்ட மறுத்து நீதிமன்றத்தின் கடும் கண்டணத்தை பெற்றவர்.
சென்னை வேளச்சேரியில் லதா ரஜினிகாந்த் நடத்திய ஆஸ்ரம் பள்ளிக்கு ஒரு கோடியே 99 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்து நில உடமையாளர் தொடுத்த வழக்கில் உடனே பணத்தை செலுத்திவிட்டு இடத்தை காலி பண்ணித்தர நீதிமன்றம் உத்திரவிட்டது.
இந்த ஆஸ்ரம் பள்ளியில் வேலை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட கடை நிலை ஊழியர்களுக்கு பல மாதம் சம்பளம் தராமல் இழுத்தடித்து அவர்கள் போராட்டம் நடத்தியது. கோச்சடையான் பட விவகாரத்தில் ஒரு விளம்பர நிறுவனத்திற்கு தர வேண்டிய கடன் விவகாரத்தில் பண மோசடியில் நீதிமன்றத்தின் கண்டணத்தை பெற்றவர். ஆக, இப்படிப்பட்டவங்க தான் தற்போது மக்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள்!
இந்தம்மாவின் கணவர் தான் சுமார் 30 வருஷத்திற்கும் மேலாக அரசியலுக்கு வரப் போகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கான இளைஞர்களை உசுப்பிவிட்டு, அவங்க வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு கடைசியில் ஜகா வாங்கிய உலக மகா உருட்டு மன்னன் ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்தை பொறுத்த வரை 76 வயசானாலும் தன் கணவரை மக்களுக்கு தொண்டு செய்ய அனுமதிக்கமாட்டங்க. இந்தம்மாவைப் பொறுத்த வரை 76 வயசுக்கு மேலேயும் கணவர் சினிமாவில் நடித்து பணம் ஈட்டித் தரும் ஒரு மெஷின் தான். இப்ப 68 வயசுல இந்தம்மா மக்கள் இயக்கம் ஆரம்பித்து, ’’வாங்க தொண்டு செய்வோம்’’ என்று ஆள் பிடிக்க வந்துட்டாங்க..!
அண்ணாமலை டிசம்பர் மாதம் தனி இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து காய் நகர்த்த ஆரம்பிக்கிறார். இவங்க மார்ச் மாதம் மக்கள் மேடை இயக்கம் என்று ஆரம்பித்து விட்டு அண்ணாமலை இயக்கம் ஆரம்பிக்கும் அதே நாள் காணொளி வாயிலாக அழைப்பு விடுக்கிறார்கள்! சமீபத்தில் ரஜினிகாந்த் தேர்தலில் அதிக தொகுதிகள் வென்ற விஜய்யின் தவெக அரியணை ஏறுவதை தடுக்க, பாஜகவின் தூதுவராக திமுகவை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு கேட்டு அம்பலப்பட்டு போனார். நேற்று அண்ணாமலையும் தன் பங்கிற்கு ரஜினிகாந்த் தான் துவங்க உள்ள கட்சிக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்ததை அம்பலப்படுத்திவிட்டார். அதன் பின்னணியை இங்கே விளக்குகிறேன்; அண்ணாமலையை பாஜகவிற்கு அழைத்து வந்தவர் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கியஸ்தர் பி.எல்.சந்தோஷ்.

ஆனால், அப்போது ரஜினிகாந்தை அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தவர் அதே ஆர்.எஸ்.எஸ்சின் ஆடிட்டர் குருமூர்த்தி. இருவரும் ஆர்.எஸ்.எஸ் என்றாலும், நேர் எதிர் துருவங்கள். ஆகவே அண்ணாமலை பாஜகவில் சேர்வதை தடுத்து நிறுத்தியதாகவும் இருக்கட்டும், அண்ணாமலையை ரஜினியின் தளபதியாக்கி பயன்படுத்திக் கொண்டது மாதிரியும் ஆச்சு என்று தான் ரஜினியை அண்ணாமலைக்கு அழைப்பு கொடுக்க வைத்தார், குருமூர்த்தி.
ஆனால், தன் ராஜகுரு சந்தோஷ் கட்டளையை மீற முடியாமல் அண்ணாமலை பாஜக பக்கம் போய்விட்டார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், தான் தலைவராக வேண்டும் என்பது தான் அண்ணாமலையின் நோக்கமேயன்றி, ரஜினிக்கு தளபதியாக – இரண்டாம் கட்டத் தலைவராகவே – கடைசி வரை அவரால் இருக்க முடியாது. அதாவது, தான் ரஜினியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாது, ரஜினிக்கு தான் பயன்படுவதாக இருந்துவிடக் கூடாது என்பதில் அப்போதே அவருக்கு ஒரு தெளிவு இருந்திருக்கிறது.
அந்த வகையில் லதா ரஜினிகாந்த் தற்போது யாரால், எதற்கு இறக்கப்பட்டு இருக்கிறார் என்று நான் சொல்வதை விடவும், மிக இயல்பாக அது விரைவில் அனைவருக்கும் தெரிய வந்து விடும் என்பதை சொல்லி வைக்கிறேன். எய்தவர் இருக்க அம்பை நோவானேன்? கருப்பு பணத்தை குவியல், குவியலாக சேர்த்து வைத்த குடும்பம் அதை காப்பாற்ற அதிகார மையத்தின் கட்டளைக்கு அடி பணிந்து இயங்கத் தானே செய்யும்.
எச்சரிக்கைமணி அடித்துவிட்டேன். இனி, சூதானமாக இருந்துக்கோங்க. ’நம்பிப் போனோம். ஏமாந்தோம்..’என்ற நிலை ஏற்பட வேண்டாமே” எனத் தெரிவித்துள்ளார்.
