டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிவாஜி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் தேவோஸ்மிதா பால்.
2017 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகள் நீடித்த இவரது திருமண வாழ்க்கையில் குழந்தைகள் இல்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு அவர் கணவரை பிரிந்தார். அதன் பிறகு கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவில் உள்ள சத்தியம் அப்பார்ட்மெண்ட்ஸ் வளாகத்தின் ஆறாவது மாடியில் தனிமையில் வசித்து வந்தார்.
தேவோஸ்மிதா பாலுக்கு தேவராதி பால் என்ற சகோதரி உள்ளார். அவர் மயூர் விகார் பகுதியில் வசித்து வந்தார். தினமும் தனது சகோதரியுடன் தொலைபேசியில் பேசுவது வழக்கம். சம்பவத்தன்று பலமுறை அழைத்தும் தேவோஸ்மிதா பால் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சகோதரி சத்தியம் அப்பார்ட்மெண்ட்ஸ் வளாகத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, வீட்டு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அண்டை வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் தேவோஸ்மிதா பால் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர். உடலைக் கண்டுபிடித்த போது, அவரது தலையின் பின்பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஆழமான காயங்களும், கைமணிக்கட்டில் நரம்புகள் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தது தெரியவந்தது.
வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தாலும், பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் எதுவும் திருடப்படவில்லை. இதனால் இது கொள்ளைக்காக நடந்த கொலை அல்ல என்றும், தனிப்பட்ட பகை அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் நடந்த கொலை எனவும் போலீசார் உறுதி செய்தனர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவ நாளில் அப்பார்ட்மெண்டிற்கு வந்து சென்ற சுமார் 200 பேரின் பட்டியலை தயாரித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், சந்தேக நபர்களின் எண்ணிக்கை 13 ஆக குறைக்கப்பட்டது.
அதில், சம்பவத்தன்று மதியம் மாஸ்க் அணிந்து மகனுடன் வந்த ஒரு தம்பதியர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உள்ளே சென்றபோது அணிந்திருந்த உடை, வெளியே வரும் போது மாற்றப்பட்டிருந்ததும் விசாரணையில் முக்கிய தடயமாக அமைந்தது.
இந்த தம்பதியர் யார், அவர்கள் யாரை சந்திக்க வந்தனர், அரை மணி நேரத்தில் உடை மாற்றி அவசரமாக வெளியேறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கார் ஓட்டுநரின் உதவியுடன் அவர்கள் தங்கியிருந்த விடுதியை கண்டறிந்து, செல்போன் எண்ணை வைத்து அவர்களின் இருப்பிடத்தை கண்காணித்தனர்.
அவர்கள் டெல்லியில் இருந்து ரயிலில் மேற்கு வங்கம் நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி போலீசின் தனிப்படை உடனடியாக விரைந்து சென்று மேற்கு வங்கத்தில் வைத்து கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகனை கைது செய்தது.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்டவர்கள் ராம் பிரசாத் தாஸ் மற்றும் அவரது மனைவி பனாஸ்ரீ தாஸ். இவர்கள் மேற்கு வங்கத்தின் வர்தமான மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 13 வயது மகன் உள்ளார்.
தேவோஸ்மிதா பாலுக்கு வர்தமான பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீக வீடு ஒன்று இருந்துள்ளது. இந்த வீட்டில் தாஸ் குடும்பம் 2023 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு வசித்து வந்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல, அந்த சொத்தை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்குமாறு அவர்கள் பேராசிரியையை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்ததுடன், வாடகை நிலுவை காரணமாக வீட்டை காலி செய்யுமாறு இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர், அந்த சொத்தை கைப்பற்ற திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி, தங்களது 13 வயது மகனுடன் ரயிலில் டெல்லி வந்து, டல்லுப்புறா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று வாடகை காரில் பேராசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், வாடகை பணம் தருவதாக கூறியதை நம்பி அவர் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.
அதன்பின், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கிய அவர்கள், கைமணிக்கட்டில் நரம்புகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் 13 வயது மகனின் கண்முன்னே நடைபெற்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலைக்குப் பிறகு உடையில் இரத்தக்கறைகள் படிந்ததால், உடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிய அவர்கள், ரயிலில் மேற்கு வங்கம் திரும்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ராம் பிரசாத் தாஸ், பனாஸ்ரீ தாஸ் மற்றும் 13 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்திற்காக ஒரு உயிரை பறித்த இந்த கொடூர சம்பவம், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பேராசையை நிறைவேற்ற முயன்ற பெற்றோர், தங்கள் மகனின் வாழ்க்கையையும் பாதித்துவிட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
