Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நார்வே செஸ் 2026 தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் இணைந்து சுமார் 10 நிமிடங்கள் செஸ் விளையாடி மகிழ்ந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனைக்காக பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் விஜய் வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் விஜய், பிரக்ஞானந்தாவிற்கு வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க  “விஜயின் ஒப்புதலோடுதான் பேசுகிறாரா?” – அமைச்சருக்கு ரவிக்குமார் பரபரப்பு கேள்வி

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய பிரக்ஞானந்தா, “முதலமைச்சர் விஜய் சார் என்னுடன் செஸ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரே போர்டு கொண்டு வரச் சொல்லி விளையாடலாம் என்று அழைத்தார். அவர் மிகவும் நன்றாகவே விளையாடினார். தன் நண்பர்களுடன் அடிக்கடி செஸ் விளையாடுவதாகவும் கூறினார்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தொடர் முடிந்த உடனேயே என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதும், தற்போது நேரில் அழைத்து பாராட்டியதும் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago