Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்விலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 1891ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழக அரசின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளிலும் தொடர்ந்து பாடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மத்திய அரசின் அண்மைய சுற்றறிக்கைக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் முதலில் பாடும் நடைமுறையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இதையும் படியுங்க  "தவெக ஜெயிச்சா தான் வார்டு குறைகள் தீரும்!" – சிவகாசி மேடையில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி பேச்சு!

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடலாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், பல ஆண்டுகளாக தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வந்த நிலையில், அந்த சுற்றறிக்கைக்குப் பிறகே நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் உள்ளிட்ட பாடல்கள் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வரும் நிலையில், மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம் மத்திய அரசின் சுற்றறிக்கை என நீங்கள் கருதினால், அந்த சுற்றறிக்கையையே நேரடியாக எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்வதற்குப் பதிலாக, அதற்குக் காரணமாகக் கூறப்படும் மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்தே சட்ட ரீதியாக சவால் விடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்க  அரசு பேருந்துகள் ஸ்தம்பித்தது! திருப்பத்தூர் பணிமனை முன்பு ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்! என்ன நடந்தது?

இதையடுத்து, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மனுதாரர் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது.

அதே நேரத்தில், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று கூறும் மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago