Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) தொடர்பாக, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்திருப்பது கிராமப்புற மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள வரைவு அறிக்கையின்படி, புதிய VB-G RAM G (வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம்) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதிப் பங்கு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ₹95,692 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 4.09 சதவீதமாகக் குறைந்துள்ளது.

புதிய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டிற்கு ₹3,923 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ₹12,136.33 கோடியும், 2024-25 நிதியாண்டில் ₹7,587.58 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  "ஏழை மக்களின் கல்வி, மருத்துவத்தில் கை வைப்பதா?" - FCRA சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அதிரடி முழக்கம்!

இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ₹3,923 கோடி நிதியைக் கொண்டு பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் கூட முழுமையாக வேலை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயம் இல்லாத காலங்களில் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் இந்தத் திட்டத்தின் நிதி குறைக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவுக்கான நிதிப் பங்கு 2.38 சதவீதமாகவும், தெலங்கானாவுக்கான பங்கு 2.17 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிதி ஒதுக்கீட்டு முறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தண்டிப்பது போன்ற நடவடிக்கையாக இது இருப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதையும் படியுங்க  ”பழனி போல் காரைக்குடியிலும் பூகம்பம்!  ₹100 கோடி கோயில் நிலம் அவுட்? - சிக்கிய பகீர் ஆதாரங்கள்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago