Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்ப புறப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லமான பொதிகை இல்லத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கச் சென்றார்.

பிரதமருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த முதலமைச்சர் விஜய், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக கோவை, மதுரை மற்றும் ஓசூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ”பொருளாதார வளர்ச்சிக்கு பேரிடியா? சென்னையின் எதிர்காலம் என்னாகும்? பரந்தூர் ஏர்போர்ட் கைவிடப்பட்டதற்கு CII விடுத்த அதிரடி எச்சரிக்கை!

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் விஜய் இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த சந்திப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், தற்போது அந்த சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முதலமைச்சர் விஜய் திடீரென தமிழகம் திரும்ப புறப்பட்டுள்ளார். அவர் டெல்லி விமான நிலையம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. நேற்றைய தினமே இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அது நடைபெறவில்லை. இன்றைய தினமாவது இந்த சந்திப்பு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அவர் தமிழகம் திரும்புவதால் அந்த சந்திப்பும் நடைபெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதன் மூலம், டெல்லி பயணத்தின் போது முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டுமே சந்தித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படியுங்க  “தோண்டியெடுங்க நான் பாத்துக்குறேன்…” - கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்… திமுக மாஜிக்கள் காலடியில் கன்னிவெடி…!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago