Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்வன். இவர் ஒலக்கூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது தாயுடன் தனியாக வசித்து வந்த இவர், கடந்த மூன்று நாட்களாக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலைமையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், ஆசிரியர் இளம்வனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின்போது, வீட்டின் பல்வேறு பகுதிகளில் மிளகாய்த் தூள் தூவப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திட்டமிட்டு யாரோ ஒருவர் அல்லது சிலர் இளம்வனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படியுங்க  "அவர் இல்லாமல் நாம் யாருமில்லை!" – மெரினாவில் உலுக்கிய தொண்டர் கடல்… 'என்றும் கலைஞர்' ஹேஷ்டேக்குடன் ஸ்டாலினின் நெகிழ்ச்சிப் பதிவு!

மேலும், வட்டி தொழில் தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் காவல்துறையின் மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் மிளகாய்த் தூள் தூவி தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இளம்வன் ஒரு சிறந்த ஆசிரியராகவும், பல்வேறு விருதுகளைப் பெற்றவராகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது கொலை சம்பவம் அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறும் ஆசிரியர் சங்கங்கள், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளன.

இந்த கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  காசுக்கு விலைபோன போலீஸாரின் சல்லித்தனம்..! திருப்பத்தூரை உலுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ஊழல் ஆடியோ..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago