சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இடையேயான நிழல் யுத்தம் இப்போது ஒரு ஜிம்பாப்வே வீரரின் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய நட்சத்திரம் பிளெஸ்ஸிங் முஸரபானிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் இப்போது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஒப்பந்தமே இல்லாம் தடை ஏன்?
முஸரபானியின் மேலாளர் தரப்பிலிருந்து வெளிவந்துள்ள தகவல்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முகத்திரையைத் கிழிப்பதாக உள்ளன. “கையெழுத்திடப்படாத அல்லது வழங்கப்படாத ஒரு ஒப்பந்தத்தை ஒருவர் எப்படி மீற முடியும்?” என்பதே மேலாளரின் காரசாரமான கேள்வி.
பிஎஸ்எல் 2026 தொடருக்காக இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் முஸரபானி தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் பெற பிசிபி முறையான ஒப்பந்தத்தை அனுப்பவே இல்லை. எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஐபிஎல் எனும் மிகப்பெரிய வாய்ப்பு தேடி வந்தபோது முஸரபானி அதை ஏற்றுக்கொண்டார். ஒரு நிர்வாகப் பிழையை மறைக்க, ஒரு வீரரின் எதிர்காலத்தைப் பழிவாங்குவது எந்த வகை நியாயம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாகிஸ்தானின் ‘ஈகோ’ யுத்தம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் தலைமையில் எடுக்கப்பட்ட இந்தத் தடை முடிவு, முழுக்க முழுக்க ‘ஈகோ’ சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை உலகமே கொண்டாடும் வேளையில், வீரர்கள் பாகிஸ்தானை விட இந்தியாவைத் தேர்ந்தெடுப்பதை பிசிபி-யால் ஜீரணிக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. உண்மையில் ஒப்பந்தங்களை மீறிய வீரர்களைக் கையாளும் போது முரண்பாடாகச் செயல்படும் பிசிபி, முஸரபானி விஷயத்தில் மட்டும் இவ்வளவு கடுமை காட்டுவது ஏன்?
ஐபிஎல்-லில் முஸரபானியின் விஸ்வரூபம்!
பாகிஸ்தான் தடை விதித்து மிரட்டினாலும், முஸரபானி தனது திறமையை ஐபிஎல் களத்தில் நிரூபித்து வருகிறார். கேகேஆர் அணிக்காக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் முதுகெலும்பை உடைத்தார்.
பாகிஸ்தானின் இந்தத் தடை முடிவு, அந்த நாட்டு லீக் மீதான மதிப்பையே குறைக்கும். எதிர்காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட வர அஞ்சுவார்கள். ஒரு வீரரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்ட முடிவுகள், கிரிக்கெட் விளையாட்டிற்கே அழகல்ல.
“பணமா? அல்லது பாகிஸ்தானா?” என்ற போட்டியில் ஐபிஎல் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. பிசிபி-யின் இந்தத் தடை முஸரபானியைப் பாதிக்கப் போவதில்லை, மாறாக ஒரு தரமான வீரரை இழந்த பிஎஸ்எல்-க்குத்தான் இது மிகப்பெரிய பின்னடைவு. முஸரபானி இப்போது கேகேஆர் அணியின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த மிரட்டல் வெறும் வெற்று வேட்டாகவே முடிகிறது!
