புதிய அமைச்சர்களின் இந்தச் சுறுசுறுப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வேளை, தவெக தலைமை அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு ரகசியக் கடிவாளத்தையும் போட்டுள்ளது.
வழக்கமாக, ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் ஒரு உதவியாளர், அரசியல் ரீதியான ஒரு உதவியாளர் என இருவர் நியமிக்கப்படுவது மரபு. இதில் அரசியல் உதவியாளர்களை அந்தந்த அமைச்சர்களே தங்களுக்கு விருப்பமானவர்களை நியமித்துக் கொள்வதுதான் முந்தைய திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்த முறை தவெக தலைமை புதிய பாணியைக் கையாண்டுள்ளது.
அமைச்சர்களுக்கான ‘அரசியல் உதவியாளர்களை’ அமைச்சர்கள் யாரும் நேரடியாகத் தேர்வு செய்யவில்லை. மாறாக, தவெகவின் முக்கியப் புள்ளியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிறுவனமே இந்த உதவியாளர்களை நியமித்து வருகிறது. அமைச்சர்களின் நிழல் போலச் செயல்படக்கூடிய இந்த உதவியாளர்களைத் தலைமைத் தரப்பே நேரடியாகக் களமிறக்கியுள்ளது அமைச்சர்களுக்கே அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இதன் பின்னணியில் ஒரு வலுவான உத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த காலத் திமுக, அதிமுக ஆட்சிகளில் அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்த சில புரோக்கர்கள், அரசு நிர்வாகத்தில் அளவுக்கு அதிகமாகத் தலையிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதுபோன்ற அவப்பெயர் தவெக அரசுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தலைமை மிக உறுதியாக இருக்கிறது.
அமைச்சர்கள் தடம் மாறி முரணாக நடக்கிறார்களா? குறிப்பாக ஊழல் மற்றும் கமிஷன் விவகாரங்களில் சிக்குகிறார்களா? என்பதை இந்த உதவியாளர்கள் மூலம் தலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கும். இதன் மூலம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், ஆரம்பத்திலேயே ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தவெக தலைமை இந்த அதிரடிக் கடிவாளத்தைப் போட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. ஆனால், மற்றொரு தரப்போ எல்லா விசஷயங்களிலும் ஆதவ் அர்ஜூனாவின் தலையீடு இருக்க வேண்டுமா? என ஆத்திரப்படுகிறார்கள்.
