https://republictn.com/

தமிழக முதல்வர் விஜயின் அண்மைகால நடவடிக்கை, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஒரு மிக முக்கியத்துவமான விழாவை விட, தனது தனிப்பட்ட மேலாளரின் வீட்டு விசேஷத்திற்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? சிங்கப்பெண் அதிரடிப்படை விழாவுக்கும் ரூட் ஜெகதீஷ் இல்ல விழாவுக்கும் என்ன தொடர்பு? மே 29-ஆம் தேதி நடப்பதாக இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத் துவக்க விழா ஏன் ரத்து செய்யப்பட்டது தெரியுமா? என சமூக வலைதளங்களில் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள், “விஜயின் மேலாளரும் ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷின் வீட்டுக் கிரகப்பிரவேசம் நடந்த தேதி மே 29. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலை பத்து மணிக்குச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நடத்தத் தேதி குறித்திருந்தார்கள்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க விழாவை விடத் தனது மேலாளர் இல்ல விழாவிற்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற ரூட் போட்டு கொடுத்தவருக்குத்தானே முன்னுரிமை அளிக்க முடியும். அதுதானே இயற்கை நீதி!

2026 தேர்தலில் தொடர்ந்து பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பழியை அன்றைக்கு இருந்த திமுக அரசு மீது போட்டது தவெக. பிரசார அனுமதியைத் தருவது தேர்தல் ஆணையம் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் பொய் சொன்னதை நம்பியவர்கள், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணம்தான் எனச் சொல்வதை நம்புவார்கள்தானே!

மக்களுக்கான திட்டங்களை விட, தனிப்பட்ட நபர்களின் விசேஷங்களுக்கு ஆளுங்கட்சி முன்னுரிமை அளிப்பது, ‘மாற்றத்தை’ நோக்கி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது. அதிகாரப் பொறுப்புக்கு வந்த பிறகும் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முக்கியத்துவம் தருவது ஒரு சிறந்த ஆளுமைக்கு அழகல்ல என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago