‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒரு பின்னடைவாக, அக்கட்சியின் எக்ஸ் தள கணக்கை உடனடியாக மீட்டெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், சமூக ஊடகக் கணக்கில் பதிவிடப்பட்ட சில உள்ளடக்கங்கள் “சிறிது புண்படுத்தும் வகையில்” இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது.
அபிஜித் திப்கே சார்பில் வழக்கறிஞர் அகில் சிபல் ஆஜரானார். அவர் நீதிமன்றத்திடம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ்தள கணக்கை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தினார். அதேவேளை, ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்டு குறியிடப்பட்ட சில பதிவுகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே நீடித்தால் தனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
‘பார் அண்ட் பெஞ்ச் இணையதளத்தின் தகவலின்படி, விசாரணையின் போது, கணக்கை மீட்டெடுப்பதற்கான தனது வாதத்தை வலுப்படுத்தும் வகையில், இதேபோன்ற விவகாரங்களில் நீதிமன்றத்திடமிருந்து இடைக்கால நிவாரணம் பெற்ற முந்தைய வழக்குகளை சிபல் மேற்கோள் காட்டினார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, “பிற வழக்குகளுக்கும் இவ்வழக்கிற்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது. இவ்வழக்கில், ஒட்டுமொத்த செயல்பாடுகளுமே இயல்பாகவே சிறிது புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதே இதற்கான காரணமாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டது. இவ்வழக்குக்கு “விரிவான பரிசீலனை” தேவைப்படுவதாகவும், அரசு மற்றும் எக்ஸ்தளம் ஆகிய இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
“உங்கள் வாதங்களில் சில நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் விரிவாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். எதிர் தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, அவை அனைத்தும் முழுமையாகப் பரிசீலிக்கப்படும். இதில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய, பரந்த அளவிலான விளைவுகளைக் கொண்ட முக்கியப் பிரச்சினைகள் அடங்கியுள்ளன,” என்று நீதிபதி கூறினார்.
மத்திய அரசு தனது விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்த பிறகு, எக்ஸ் நிறுவனத்திடம் கணக்கு முடக்கத்திற்கான உத்தரவை ஆவண வடிவில் சமர்ப்பிக்குமாறு கோர முடியுமா? என்பதை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் நீதிபதிகள் அமர்வு மேலும் தெரிவித்தது.
“இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்,” என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. உடனடியாக நிவாரணம் வழங்க மறுத்த அதே வேளையில், சமூக ஊடகக் கணக்கு முடக்கம் தொடர்பான உத்தரவுகளைப் பரிசீலிக்கும் மத்திய அரசின் மறுஆய்வுக் குழுவை அணுகி, தனது வழக்கை மேலும் முன்னெடுத்துச் செல்ல திப்கே-வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஒரு நையாண்டி அரசியல் அமைப்பாகத் தொடங்கி, இந்திய இளைஞர்கள், எதிர்க்கட்சிகளின் சில பிரிவினரிடையே செல்வாக்கு பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அபிஜீத் திப்கே, கணக்கை அணுக முயன்றபோது காட்டப்பட்ட அறிவிப்பின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, “எதிர்பார்த்தபடியே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பையும் சேர்த்திருந்தார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்து, எக்ஸ் கணக்கில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களையும், இன்ஸ்டாகிராமில் 22 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் ஈர்த்திருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சில இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று குறிப்பிட்டதாகக் கூறப்படும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு பகடியாகத் தொடங்கப்பட்டது. “கரப்பான் பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழிலில் வேலை கிடைப்பதில்லை. சிலர் சமூக ஊடகங்களில் இருக்கிறார்கள். சிலர் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாக மாறுகிறார்கள்” என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
