தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான த.வெ.கவில் இணையும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். மரகதம் குமரவேல் – மதுராந்தகம் (தனி) தொகுதி, ஜெயக்குமார் – பெருந்துறை தொகுதி, சத்யபாமா – தாராபுரம் (தனி) தொகுதி ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இந்த ராஜினாமாக்களை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இவர்களது 3 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது இந்த 3 தொகுதிகளையும் சேர்த்து, தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மற்றுமொரு எம்.எல்.ஏ-வும் விரைவில் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரத்தில் கசிந்து வருகின்றன.

கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள், எடப்பாடி பழனிசாமி தரப்பு- எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பு என இரண்டு வலுவான அணிகள் உருவாயின. இந்த உள்கட்சிப் மோதல் சமீபத்தில் த.வெ.க அரசு எதிர்கொண்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பகிரங்கமாக வெளிப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தக் கொறடா உத்தரவு மீறல் காரணமாக, அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்திருந்தது. தகுதி நீக்க நடவடிக்கை பாயக்கூடும் என்ற சூழலில்தான், வேலுமணி ஆதரவு முகாமில் இருந்த இந்த 3 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த ராஜினாமாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “எம்.எல்.ஏ-க்கள் மீதான கட்சித் தாவல் புகார் சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும் போது, அவர்களது ராஜினாமாவை ஏற்கக் கூடாது. முதலில் தகுதி நீக்க விவகாரத்தில்தான் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும்” என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சபாநாயகரைச் சந்தித்து வாதிட்டனர். ஆனால், சபாநாயகர் ஏற்கனவே ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், எடப்பாடி தரப்பின் இந்த எதிர்ப்பு மனு காலதாமதமானது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தற்போது காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில், ராஜினாமா செய்த அதே மூவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் த.வெ.க, இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் சட்டமன்றத்தில் தனது பலத்தை அதிகரித்து, தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
மறுபுறம், அ.தி.மு.க-வில் வேலுமணி தரப்பில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க-வை முழுமையாகக் கைப்பற்றப் போவது யார் என்ற அதிகாரப் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது. மொத்தத்தில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்கள் ஆளுங்கட்சியான த.வெ.க-வின் கை ஓங்குவதற்கும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மேலும் பலவீனப்படுவதற்கும் வழிவகுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
