அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தாலும், மிக அதிக பாதுகாப்பு கொண்ட பகுதியாக கருதப்படும் வெள்ளை மாளிகை அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
21 வயதான நசீர் பெஸ்ட் என்பவர் திடீரென எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளை மாளிகை அருகே உள்ள 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 20 முதல் 25 முறை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது அவர் பாதுகாப்பு படையினரை நோக்கி மீண்டும் சுட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையிலேயே இருந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர் ஏற்கனவே வெள்ளை மாளிகை அருகே உள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன்னதாகவே எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மனநல பாதிப்பு காரணமாகவும் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பும் இதேபோன்று வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
