டெல்லியில் அமைந்துள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சோர்வையும் சிக்கல்களையும் குறைப்பதற்காக இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பிரபலமான சந்தைகளான லஜ்பத் நகர், சரோஜினி நகர் மற்றும் சாந்தினி சவுக் போன்ற இடங்களில் பொருட்கள் வாங்குவது பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் பலரும் நீண்ட நேர நடப்பு, கூட்ட நெரிசல் மற்றும் சுமைகள் காரணமாக சோர்வடைவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் “கேரி மேன்” (Carrymen) என்ற ஷாப்பிங் உதவி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த “கேரி மேன்” சேவையின் அடிப்படையில், “நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள்; நாங்கள் பொருட்களை வாங்கி, உங்களுக்கு உதவுகிறோம்” என்பதே முக்கியக் கருத்தாகும். இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை தேர்வு செய்யும் போது, அந்த பொருட்களை எடுத்துச் செல்லும் சுமையை கேரி மேன் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
மேலும், கடைகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல், உணவு வரிசைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பதிலாக காத்திருத்தல், ஓய்வெடுக்க இடங்களை கண்டறிதல், மடிக்கக்கூடிய நாற்காலைகளை வழங்குதல் போன்ற சேவைகளையும் இவர்கள் செய்கிறார்கள். அதேபோல், வாகன நிறுத்தும் இடங்கள் அல்லது ரயில்வே நிலையங்கள் வரை உதவியும் வழங்கப்படுகிறது.
இந்த சேவைக்காக ஒரு மணி நேரத்திற்கு ரூ.149 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு உதவியாளர் 12 கிலோ வரை மட்டுமே பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். அதற்கு அதிக எடை இருந்தால், கூடுதல் உதவியாளரை கூடுதல் கட்டணத்தில் நியமித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
