கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ஐயர்களை வைத்து, வேத மந்திரங்கள் முழங்க, சனாதன முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டன. சனாதனத்தை தீவிரமாக எதிர்க்கும் திமுகவின் பொதுச் செயலாளரே தனது வீட்டுத் திருமணத்தை இப்படி நடத்தியது திராவிட இயக்கத் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் சங்கொலி திருநாவுக்கரசு ஆகியோர், துரைமுருகன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், திமுக தலைமை இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகிரங்க கோரிக்கை விடுத்தனர்.
கண்ணன் ரவி டீம் செய்த சம்பவம்
அரசியல் ரீதியான சர்ச்சை ஒருபுறமிருக்க, திருமண மண்டபத்தில் திமுக முக்கியப் புள்ளிகளுக்கு நேர்ந்த அவமரியாதை அனலைக் கிளப்பியுள்ளது. துரைமுருகனின் சம்பந்தியான தொழிலதிபர் கண்ணன் ரவி தரப்பினர், திருமணத்திற்கு வந்திருந்த திமுக எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்களை அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தரப்படவில்லை. இரண்டு முக்கிய எம்பிக்கள் மணமக்களை வாழ்த்த மேடையை நோக்கிச் சென்றபோது, கண்ணன் ரவியின் ஆட்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “கொஞ்சம் நில்லுங்கள், அவர்கள் வந்துவிட்டுப் போகட்டும்” என மேடைக்குக் கீழே காக்க வைத்துள்ளனர். இதனால் தங்களின் சுயமரியாதை பாதிக்கப்பட்டதாக ஆவேசப்பட்ட அந்த எம்பிக்கள், மேடையேறாமல் கோபத்துடன் திருமணத்தை விட்டு வெளியேறினர். இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் முறையாகப் பத்திரிக்கை தராததால், அவர்களும் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே, இந்தத் திருமணம் ஐயர் முன்னிலையில்தான் நடக்கப் போகிறது என்பதை மு.க.ஸ்டாலின் அறிந்து வைத்திருந்தார். இதனால் சடங்குகள் நடக்கும் நேரத்தில் அங்குச் செல்வதைத் தவிர்த்து, திருமணம் முடிந்த பின்னர்ச் சென்று வாழ்த்தலாம் என்றே அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் துரைமுருகனோ, “நீங்கள் வரவில்லை என்றால் உங்களை நான் புறக்கணித்துவிட்டதாகப் பெரிய செய்தியாகிவிடும். நீங்கள் வரும்போது மேடையில் அந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்திருக்கும்” என ஸ்டாலினுக்கு உறுதியளித்திருந்தார். அதன் பேரிலேயே ஸ்டாலின் அங்குச் சென்றார. ஆனால் துரைமுருகன் கொடுத்த வாக்கைக்காப்பாற்றவில்லை. இதனால் ஸ்டாலினுக்கும் துரைமுருகன் மீது கடும் கோபம் இன்னும் குறையாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் அறிவுலகம் பாராட்டு விழாவில் கலந்துகொண்டபோது, திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.துரைமுருகன் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்தபோது, ஸ்டாலின் தனது இக்கட்டான சூழலை விளக்கியுள்ளார்.
“இதே தவறை ஒரு மாவட்டச் செயலாளரோ அல்லது துணைப் பொதுச் செயலாளரோ செய்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இவர் கட்சியின் பொதுச் செயலாளர். அண்ணா காலத்து மூத்த தலைவர். பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இப்போது அவர் மீது அதிகாரப்பூர்வமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால், அது அவரது சீனியாரிட்டியைக் குறைத்து மதிப்பிடுவது போல் ஆகிவிடும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘திமுக வன்னிய சமுதாயத்திற்கு எதிரான கட்சி’ என்ற முத்திரையைக் குத்தச் சில எதிர்த்தரப்பினர் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதைச் சிக்கலாக்கக் கூடாது” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் சைலன்ட் ஸ்ட்ராடஜி
துரைமுருகன் மீதான அதிருப்தியைக் கையாளுவதற்கு ஸ்டாலின் ஒரு சைலண்டான உத்தியைக் கையில் எடுத்துள்ளார். தற்போது திமுகவின் உட்கட்சித் தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திமுகவின் தலைமைக் கழகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அப்பொழுது, துரைமுருகனின் வயதை காரணம்காட்டி, அவரை மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தவுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, கொள்கைப் பிடிப்புள்ள ஒருவரைப் புதிய பொதுச் செயலாளராகக் கொண்டுவர ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
“எதையுமே சூடாக இருக்கும்போது கையில் எடுக்கக் கூடாது” என்ற கி.வீரமணியின் அதே பாணியைப் பின்பற்றி, தற்போதைய சர்ச்சையை அமைதியாகக் கடந்து, வரவிருக்கும் உட்கட்சித் தேர்தலின் மூலம் துரைமுருகனுக்கு அரசியல் ரீதியான செக் வைக்க ஸ்டாலின் முழுமையாகத் தயாராகிவிட்டார்.
