Coimbatore Library

திமுக தீட்டிய திட்டம்… தவெக திறந்த நூலகம்… உள்ளே போனால் AI குப்பைகள்! ஸ்டாலின் போன பிறகு  வெடித்தது ஏன் ?

சென்னையில் பிரம்மாண்டம். 7 ஏக்கர். 7 மாடி. ஏறத்தாழ 300 கோடி ரூபாய். அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரிசையில் இன்னொரு அடையாளம் என்று சொல்லி உருவானது தான் கோவை ‘பெரியார் அறிவுலகம்’.

திட்டம் போட்டது கடந்த திமுக ஆட்சி. பெயரிலேயே இருக்கிறது அதன் ஆன்மா – பெரியார். அதாவது பகுத்தறிவு, அறிவியல், சுயமரியாதை, மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவு.

திறந்தது தவெக ஆட்சி. 2026 அக்டோபர் 16-ம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். முகப்பில் பெரியார் சிலை அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க பிரம்மாண்டம்.

ஆனால், பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள் போய் பார்த்தவர்கள் தான் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

அவர் எழுதியது சாதாரண விமர்சனம் இல்லை. அது ஒரு குற்றச்சாட்டு. மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு.

1. நான்காவது மாடியில் என்ன நடந்தது? நூலகத்தின் 4-வது தளம் தமிழ் நூல்கள் பிரிவு. அங்கே அலமாரிகளை அலங்கரிப்பது ஒரே ஒரு பதிப்பகத்தின் புத்தகங்கள் தான்.

பெயர்: ‘அகல்விளக்கு பதிப்பகம்’ எண்ணிக்கை: கிட்டத்தட்ட 1,800 நூல்கள்!

40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இருக்கும் பெருமாள்முருகனுக்கே இந்த பதிப்பகம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் இது பதிப்பகமே இல்லை. இந்த நூலகத்துக்கு புத்தகம் சப்ளை செய்வதற்காகவே முளைத்த புது கம்பெனி என்பது தான் சந்தேகம்.

அகல்விளக்கு மட்டுமல்ல. பீனிக்ஸ் பதிப்பகம் என்ற இன்னொரு பெயரிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. அதுவும் இதே ரகம் தான்.

இன்னும் பிரிக்காத புத்தகப் பெட்டிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அதில் என்னென்ன பூதங்கள் ஒளிந்திருக்கின்றனவோ? ஆங்கிலப் பிரிவில் என்ன இருக்கிறதோ?

2. விலையை கேட்டால் தலை சுற்றும்! , 300 பக்க புத்தகத்துக்கு சாதாரண பதிப்பகங்கள் ரூ.350 வைக்கிறார்கள்.

இங்கே? நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ – ரூ.1,445 ‘மதுரைக் காஞ்சி ஒரு இலக்கியப் பயணம்’ – ரூ.1,395

எல்லா புத்தகங்களும் கெட்டி அட்டை. எல்லாம் 4 மடங்கு விலை. இந்த விலையில் என்ன அரிய உழைப்பு இருக்கும் என்று பிரித்துப் பார்த்தால் தான் உண்மை தெரிகிறது.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சி அமைக்கக்கூடாடது..! திமுகவின் 'ஆபரேஷன் அதிமுக..'! ஸ்டாலின் மாஸ்டர் பிளான்..!

3. உள்ளே இருப்பது புத்தகமா? AI குப்பையா? பெருமாள்முருகன் சுட்டிக்காட்டிய சில மாதிரிகள் இதோ:

நாலடியார் வாழ்வின் வழிகாட்டி – சூர்யா பாலு: “நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி…”

அடேங்கப்பா! நாலடியார் ஒரு நூல். பெயர் தெரியாத சமண முனிவர்கள் எழுதிய 400 வெண்பாக்களின் தொகுப்பு. பள்ளிப் பிள்ளைக்குக் கூட தெரியும். ஆனால் இந்த ‘ஆசிரியருக்கு’ நாலடியார் ஒரு ஆள்! 15 ஆண்டுகள் தமிழ் படித்து, 30 ஆண்டுகள் தமிழ் சொல்லிக் கொடுத்த பெருமாள்முருகனே தலையில் அடித்துக் கொள்கிறார்.

மதுரைக் காஞ்சி ஒரு இலக்கியப் பயணம் – தேவ் நிலன்: “மதுரைக் காஞ்சி என்பது மதுரைக் கூழத்திப் பெருவழுதி என்ற புலவர் பாடிய 782 செய்யுள்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு… அவர் ஒரு வீர அரசன்…”

யார் இந்த கூழத்தி பெருவழுதி? மதுரைக் காஞ்சியை எழுதியது மாங்குடி மருதனார். அவர் புலவர், அரசர் இல்லை. வரலாற்றையே தலைகீழாக புரட்டியிருக்கிறார்கள்.

பாரதியார் கதைகள் – மனிஷா சரவணன்: பாரதியார் எழுதிய கதையாம் ‘சாதனையின் முகம்’. “மதுரை நகரில் பிறந்த இராமன்… செருப்புச் சூடிகளை விற்கும் தொழிலில் பணி செய்கின்றான்…”

இதுவா பாரதியார் நடை? இதுவா பாரதியார் தமிழ்? பாரதி ஆய்வாளர்கள் கேட்டால் மயங்கி விழுந்துவிடுவார்கள்.

தமிழ்நாடு ஒரு பார்வை – தனலட்சுமி அர்ஜுன்: “தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) இருந்தார்… அதன் பிறகு 1952-ல் இருந்து திராவிட கிழக்கின் அரசியல் வீரவாகிய மு.க.இராமசாமி…”

தமிழ்நாட்டின் வரலாறே தெரியாதவர்கள் எழுதியிருக்கிறார்கள். முதல் முதல்வர் யார் என்று கூட தெரியாமல் புது முதல்வர்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கீழடி செப்பும் வரலாறு – ஜோதி ஹரிஹரன்: கீழடியில் கிடைத்த சிற்பம் என்று பெரிய நந்தியின் புகைப்படம். கீழடியில் நந்தி கிடைக்கவே இல்லை. இவர் இரவில் போய் தூக்கி வந்தாரோ?

4. ஆசிரியர்கள் எல்லாம் யார்? போலிப் பெயர்களா?

பெயர்களைப் பாருங்கள்: ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன், தாமரை பன்னீர், ராணி பன்னீர், தாமரை கார்த்தி, சூர்யா பாலு, மங்களேஸ்வரி பாலு, விஜய பாலு, திரிஷா விஜய், மோனிகா சூர்யா…

இதையும் படியுங்க  திமுக, அதிமுக- ஆட்சியை காப்பியடிக்கும் தவெக..! நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்..! 50 நாள் விஜய் ஆட்சி மீது கடும் விமர்சனம்..!

ஒரே குடும்பப் பெயர்கள் மாறி மாறி வருகிறது. இது தான் AI-யின் லட்சணம். ஒரு சில பெயர்களை வைத்து சுழற்றி போலி ஆசிரியர்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

தலைப்புகளும் அப்படியே: ‘நகர நீர் மேலாண்மை’, ‘நகர நீர் சுகாதாரம்’, ‘நகர நீர் சட்டங்கள்’, ‘நகர நீர் கல்வி’, ‘நகர நீர் எதிர்காலம்’… ஒரே வார்த்தையை வைத்து 100 தலைப்பு.

புத்தகங்களில் போடப்பட்டிருக்கும் ISBN எண்களை இணையத்தில் தேடினால் ‘அப்படி ஒரு எண்ணே இல்லை’ என்று வருகிறதாம். மின்னஞ்சல் முகவரி மட்டும் இருக்கிறது: akalvilakkupathipagam@gmail.com. தொலைபேசி எண் கூட இல்லை.

தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு (AI) மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தான் பெருமாள்முருகனின் குற்றச்சாட்டு.

5. டைம்லைன் தான் உண்மையை சொல்கிறது! இங்கே தான் இரண்டாவது செய்தி இணைகிறது.

அக்டோபர் 16 – விஜய் திறந்து வைத்தார். அமைதி. நவம்பர் 4 – முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டார். அன்று மாலை திராவிடர் கழகம் பாராட்டு விழா.

அதற்குப் பிறகு தான் – பெருமாள்முருகன் வெடித்தார். அப்படியென்றால் என்ன?

ஸ்டாலின் செல்லவில்லை என்றால் இந்த போலி நூல்கள் குறித்த செய்தி வந்திருக்குமா? வந்திருக்காது.

ஸ்டாலின் போனதால் தான் எல்லோர் கவனமும் அந்த நூலகத்தின் மீது திரும்பியது. அவர் போகாமல் இருந்திருந்தால், அந்த போலி புத்தகங்கள் அப்படியே அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்திருக்கும். மாணவர்கள் அதைப் படித்து பொய்யான வரலாற்றையும், மூடநம்பிக்கையையும் மூளையில் ஏற்றிக் கொண்டிருந்திருப்பார்கள்.

இப்போது அந்த போலி நூல்களை புகுத்திய கும்பல் என்ன செய்கிறது? “ஸ்டாலின் வந்ததால் தான் சர்ச்சை” என்று திசை திருப்புகிறது.

திருடனைப் பிடிக்க போலீஸ் வந்தால், போலீஸ் வந்ததால் தான் திருட்டு தெரிந்தது என்று சொல்வது போல் இருக்கிறது இது.

ஸ்டாலின் சென்றாலே அந்த கும்பல் விமர்சிப்பது ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு பயம். பெரியார் இயக்கம் பார்த்துவிட்டது என்றால் இனி இந்த ஊழலை மூடி மறைக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

இதையும் படியுங்க  ₹2000 கோடி நிலம்.. சிக்கிய விஜய் அரசு! வெளிவந்த மரிய வில்சன் ரகசியங்கள்! செம்மஞ்சேரி மர்மம் உடைந்தது!

6. இது தான் கேள்வி – தவெக அரசே பதில் சொல்! பெருமாள்முருகன் கேட்கும் கேள்விகள் தான் தமிழ்நாட்டின் கேள்விகள்:

1. போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? 2. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? 3. யாருக்கு பணம் போய் சேர்ந்திருக்கிறது? 4. யார் தூண்டுதலில் இந்த மூடநம்பிக்கை நூல்கள் பெரியார் பெயரில் உள்ள நூலகத்தில் புகுத்தப்பட்டன?

நூல்கள் வாங்க வல்லுநர்கள் பரிந்துரை பெறப்பட்டதாக சொன்னார்களே, அந்த வல்லுநர்கள் யார்? அவர்கள் இந்த குப்பைகளை படித்துப் பார்த்தார்களா? இல்லை கமிஷனை பார்த்தார்களா?

பெரியார் என்றாலே பகுத்தறிவு. அந்த பெரியார் பெயரிலேயே போலி புத்தகங்களை வைத்து மக்களை ஏமாற்றுவதா? பெரியாரே உயிரோடு இருந்திருந்தால் இந்த புத்தகங்களை தூக்கி குப்பையில் போட்டிருப்பார்.

இது சாதாரண தவறு இல்லை. இது மக்கள் பணத்தை கொள்ளையடித்த மாபெரும் மோசடி. மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் படிக்க வேண்டிய இடத்தில் பொய்யான வரலாற்றை வைத்திருப்பது ஒரு தலைமுறையையே கெடுக்கும் செயல்.

உடனடியாக செய்ய வேண்டியது: அந்த 1,800 + 100 போலி புத்தகங்களையும் அலமாரியில் இருந்து தூக்குங்கள்.

விசாரணை குழு அமையுங்கள். யார் ஆர்டர் கொடுத்தது, யார் பணம் வாங்கியது என்று வெளிப்படையாக சொல்லுங்கள்.

மொத்த கொள்முதல் பட்டியலையும் வெளியிடுங்கள். இன்னும் எத்தனை நூலகங்களில் இதே போலி புத்தகங்கள் போய் சேர்ந்திருக்கின்றன? இல்லை பெருமாள் முருகன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் அளவுக்கு போலி நூல்களை புகுத்தப்பட்டதா?

“திமுக திட்டம் என்று சொல்லவில்லை” சர்ச்சை, “ஆயுத பூஜை விடுமுறை” சர்ச்சை எல்லாம் சின்ன விஷயம். உண்மையான சர்ச்சை இது தான். கோடிக்கணக்கில் நடந்த ஊழல்.

முதல்வர் விஜய் அவர்களே! நீங்கள் திறந்து வைத்த நூலகத்தில் இப்படி ஒரு ஊழல் நடந்திருக்கிறது. நீங்கள் மௌனமாக இருந்தால், இந்த ஊழலுக்கு நீங்களும் உடந்தை என்று தான் மக்கள் நினைப்பார்கள்.

ஸ்டாலின் வந்ததால் வெளியே வந்த உண்மையை, ஸ்டாலினை விமர்சித்து மறைக்க முடியாது.

போலி நூல்களை அகற்று! ஊழல் கும்பலை அம்பலப்படுத்து!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *