எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு “தொங்கு சட்டசபை” உருவாகும் சூழல் தமிழகத்தை அதிர வைத்துள்ளது.

தேர்தல் களத்தில் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இன்று 109 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு மிக அருகில் (இன்னும் 9 இடங்களே குறைவு) விஜய் வந்துள்ளது, பாரம்பரியக் கட்சிகளான திமுக – அதிமுகவை நிலைகுலையச் செய்துள்ளது. மறுபுறம், ஆளுங்கட்சியான திமுக வெறும் 76 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 54 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியைக் காக்கத் துடிக்கும் திமுகவிற்கு இது மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தலைவர்களுக்கே சறுக்கல்:
அனைவரையும் உலுக்கிய செய்தி என்னவென்றால், முதலமைச்சராக வலம் வந்த மு.க. ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தத்தளித்துப் போராடி வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் முகமாகத் திகழும் தலைவர்களே தோல்வியின் விளிம்பில் இருப்பது திமுக தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவின் ‘ஆபரேஷன் அதிமுக’
ஆட்சி அதிகாரம் கைவிட்டுப் போகும் சூழலில், திமுக தலைமை தனது அனுபவ அரசியல் வித்தைகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கும் செய்திகள் கசிகின்றன. அரசியல் சாசனத்தின்படி, கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, ஒரு கட்சியின் 2/3 பங்கு உறுப்பினர்களை உடைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதிமுக தற்போது 54 இடங்களுக்குள் சுருங்கியுள்ள நிலையில், அதில் கணிசமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ-க்களை வளைப்பது திமுகவிற்குச் சாத்தியமான ஒன்றுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவில் பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், கட்சித் தலைமை குறித்த அதிருப்தி எழலாம் என்பதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள திமுக காய் நகர்த்தி வருகிறது. திமுகவின் தற்போதைய வியூகம் மிகவும் தெளிவானது. “பங்காளிகள் (பாரம்பரியக் கட்சிகள்) ஆளலாம்; ஆனால் புதிதாக வருபவர்களுக்கு இடமளிக்கக்கூடாது” என்ற நோக்கில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க, அதிமுகவிலிருந்து பிரியும் ஒரு குழுவை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்க திமுக முற்படலாம் எனத் தெரிகிறது. கோட்டை யாருக்கு?விஜய்யின் தவெக 109 இடங்களுடன் பெரும்பான்மைக்கு மிக அருகில் இருக்கும் நிலையில், அந்த 9 இடங்களுக்கான இழுபறிதான் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகிறது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *