தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ங்கள் பின்வருமாறு:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், தெற்கு கேரள கடலோரப் பகுதியிலிருந்து கர்நாடக கடலோரப் பகுதி வரை வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக பலத்த கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் ஒன்றிணையும் வளிமண்டல அடுக்கில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
சென்னையில் காலையிலேயே மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான தீவிர ‘முரசு’ புயல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கு இடையே கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயலின் எஞ்சிய வளிமண்டல சுழற்சியும் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் நீடிக்கிறது. இது அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பாதையோடு இணைந்து, தென்னிந்தியாவிற்குள் கடல் பகுதிகளில் இருந்து அதிகப்படியான மேகக்கூட்டங்களை தள்ளுவதால் பரவலான கனமழை நீடித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தின் உச்சக்கட்டமாக, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த வளிமண்டல நிகழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்கக்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிகச் சாதகமாக இருப்பதால், வளிமண்டல சுழற்சிகள் மிக வேகமாக புயல் சின்னங்களாக மாறுகின்றன. இது நவம்பர் இரண்டாவது பாதியில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீண்டும் ஒரு பெருமழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.
அடுத்தடுத்து அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் இந்த வானிலை மாற்றங்களால் தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, இடி-மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடி மின்னலின் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
