Amitabh Bachchan

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் அவரது தனித்துவமான அடையாளங்களை (Personality Rights) அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் நிரந்தரத் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமிதாப் பச்சனின் பெயரைப் பயன்படுத்திப் போலி லாட்டரி மோசடிகள், இணையதளங்கள், டி-ஷர்ட்டுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியற்ற மொபைல் செயலிகள் மூலம் அவரது நற்பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தனது பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்ட தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி அவர் தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட போலியான ‘கோன் பனேகா குரோர்பதி’ (KBC) லாட்டரி வெற்றிச் செய்திகள், அமிதாப் பச்சனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட பொது அறிவு வினாடி வினா புத்தகங்கள், ‘அமிதாப் பச்சன் வீடியோ கால்’ என்ற பெயரில் இயங்கிய மொபைல் செயலிகள், அவரது உருவம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாக வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், அவரது பெயரில் போலியான இணையதள முகவரிகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதையும் படியுங்க  ”கமலின் 4 அவதாரங்களை ஒரே பிரேமில் காட்டிய மாயாஜால இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!"

இதனை விசாரித்த நீதிமன்றம், அமிதாப் பச்சனின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உருவ அடையாளங்களை வணிக லாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்று நிரந்தரத் தடை விதித்துள்ளது. இத்தகைய செயல்கள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, நுகர்வோரை ஏமாற்றும் வகையில் அமையும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமிதாப் பச்சனின் அடையாளங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் இணையதள இணைப்புகள், மொபைல் செயலிகள் மற்றும் ரிங்டோன்களை உடனடியாக நீக்குமாறு தொலைத்தொடர்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 9 முக்கிய எதிர்தரப்பினர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 4 பேர் அமிதாப் பச்சனுடன் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொண்டனர். அமிதாப் பச்சனின் தனிநபர் உரிமைகளை ஏற்றுக்கொண்ட அவர்கள், இனி அவரது அனுமதியின்றி பெயர், புகைப்படம் மற்றும் குரலை எந்தவொரு பயன்பாட்டிற்கும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் நீதிமன்றம் விடுவித்தது.

மீதமுள்ள 4 எதிர்தரப்பினருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. மேலும், வழக்கு தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், சிவில் நடைமுறைச் சட்டத்தின் (CPC) Order VIII Rule 10-ன் கீழ் அவர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படியுங்க  கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட இசைஞானி: பாக்யராஜ் அஞ்சலிக்கு இளையராஜா வராததற்கான உண்மையான காரணம்!

அமிதாப் பச்சன் இந்த வழக்கை முதன்முதலில் தாக்கல் செய்தபோது, தனது பெயர் மற்றும் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியிருந்தார். மேலும், www.amitabhbachchan.com மற்றும் www.amitabhbachchan.in உள்ளிட்ட இணையதள முகவரிகள் அவரது பெயரில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அவற்றையும் முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Amitabh Bachchan

இந்தத் தீர்ப்பில் முக்கிய அம்சமாக, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராகவும் (John Doe Order) நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கில் நேரடியாகச் சேர்க்கப்படாத நபர்களும் எதிர்காலத்தில் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படம், குரல் அல்லது AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலியான குரல் மற்றும் டீப்ஃபேக் (Deepfake) உள்ளடக்கங்களை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்காக ஒவ்வொரு முறையும் புதிதாக வழக்குத் தொடர வேண்டிய அவசியம் இருக்காது என்பது இந்த உத்தரவின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே, 2022ஆம் ஆண்டு இதே விவகாரத்தில் அமிதாப் பச்சனுக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவை உறுதிப்படுத்தி, நிரந்தரத் தடை விதித்து நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதையும் படியுங்க  "மனைவிக்கு வாங்கின முதல் நகை இதுதான்!".. 'வருங்கால முதல்வர்' முழக்கத்திற்கு SK கொடுத்த க்யூட் ரியாக்ஷன்!

அமிதாப் பச்சனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அனில் கபூர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சின்னத்திரை நடிகை ருபாலி கங்குலி உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது புகைப்படங்கள், குரல் மற்றும் ஆளுமைப் பண்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதற்கும், AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கும் எதிராக நீதிமன்றத்தை நாடி தங்களது தனிநபர் உரிமைகளைப் பாதுகாத்துள்ளனர்.

பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் ஆளுமைப் பண்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அமிதாப் பச்சனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த நிரந்தரத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *