நவம்பர் 4 அன்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோவைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த ஒரே ஒரு கோவை பயணத்தில், தமிழக அரசியலையே உலுக்கும் இரண்டு முக்கிய அரசியல் செய்திகள் ஒளிந்திருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
2021-2026 திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பிரம்மாண்ட நூலகக் கட்டடம் கட்டப்பட்டு, 99% பணிகள் நிறைவடைந்தன. அண்மையில் முதல்வர் விஜய் இந்த நூலகத்தைத் திறந்து வைத்த நிலையில், இந்த பிரம்மாண்ட நூலகத்தை அமைத்துக் கொடுத்ததற்காக திராவிடர் கழகம் சார்பில் ஸ்டாலினுக்கு கோவையில் ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் ரீ-என்ட்ரி
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சற்று ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் பழைய பவர், முக்கியத்துவத்தோடு களத்திற்குத் திரும்பியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் (லீ மெரிடியன் ஹோட்டல் எதிரில்) 50 சென்ட் இடத்தில் 3 தளங்களுடன் திமுகவுக்கு சொந்த அலுவலகம் கட்டும் திட்டத்திற்கு, செந்தில் பாலாஜியின் முயற்சியால் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வழக்கமான தனது கெத்தான பாணியில் ஸ்டாலினுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து, மேற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கு குறையவில்லை என்பதை செந்தில் பாலாஜி நிரூபித்துள்ளார்.

கரூர் இடைத்தேர்தல்
அதிமுக எல்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததால், கரூருக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. கலைஞர் முதன்முதலில் வென்ற குளித்தலை அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க கரூர் தொகுதியில் ஸ்டாலினையே போட்டியிடுமாறு செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்தார்.
ஆனால், ஸ்டாலின் சட்டமன்றம் செல்வதில் ஆர்வம் காட்டாததால், கரூர் தொகுதியில் தனது தம்பி அசோக் குமாரை வேட்பாளராகக் களமிறக்க செந்தில் பாலாஜி விரும்புகிறார். இதையும் ஸ்டாலினிடம் அவர் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். கோவை திமுக அலுவலக அடிக்கல் நாட்டு விழா, பாராட்டு விழா மூலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் திமுக தலைமை முழு முக்கியத்துவம் வழங்கத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
