Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

tasmac

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, டாஸ்மாக் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள், தற்போது அரசுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே ஒரு பெரும் போராக உருவெடுத்துள்ளது. அரசின் புதிய உத்தரவை எதிர்த்து இன்று (நவம்பர் 1) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடியாக ஊழியர்களைப் பணியில் இருந்து தூக்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புதிய மாற்றம் என்ன?
தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் ஏற்கனவே சில மாவட்டங்களில் அமலில் உள்ளது. இதன்படி, மதுபாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த 10 ரூபாய் தொகையை, மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே சேர்த்து, நவம்பர் 1 முதல் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து 8 டாஸ்மாக் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி விஜய் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் அதிரடி காரணத்தை இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ் காரசாரமாக உடைத்துள்ளார். “முன்பு 140 ரூபாய் பாட்டிலுக்கு, காலி பாட்டிலுக்காகக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த 150 ரூபாய் போக, இன்னும் ஒரு 10 ரூபாயைக் கூடுதலாக வசூலித்து வந்தார்கள். அதுதான் முந்தைய ஆட்சியாளர்களின் ‘கட்சி நிதி’. அதாவது 140 ரூபாய் பாட்டிலை 160 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளையடித்தார்கள். இந்த முறைகேடான வழிகளை அடைத்து, அந்தப் பணம் முழுவதும் அரசு கஜானாவிற்கு வர வேண்டும் என்பதற்காகவே, MRP விலையிலேயே (140+10 = 150) இணைத்துள்ளோம். இனி இதற்கு மேல் ஒரு பைசா கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது!” என்று அமைச்சர் விக்னேஷ் விளக்கியுள்ளார்.

இதையும் படியுங்க  கள்ளக்காதல் வெறி..! நாடு காத்த கணவனுக்கு வீட்டுக்குள் மனைவி செய்த கொடூரம்..!

போர்க்கொடி தூக்கிய ஊழியர்கள்
அரசின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். காலி பாட்டில்களைத் திரும்பப் பெற்று அடுக்கி வைக்கக் கடைகளில் போதிய இடவசதி இல்லை. பாட்டில்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க ஸ்கேனர் உள்ளிட்ட எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் செய்து தரப்படவில்லை. காலி பாட்டில்களை எண்ணி, பாதுகாத்து, மீண்டும் ஒப்படைக்கும் பணிகளால் தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்பது ஊழியர்களின் வாதம்.

ஞாயிற்றுக்கிழமை அதிரடி: 460 கடைகள் மூடல்
இந்தப் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நவம்பர் 1-ம் தேதி சென்னை, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, கரூர், வேலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊழியர்கள் தன்னிச்சையாகக் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தில் உள்ள மொத்த 4,040 கடைகளில், சுமார் 460 கடைகள் இன்று பூட்டப்பட்டுக் கிடந்தன. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்தத் திடீர் மூடல் காரணமாக அரசுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய அறிவிப்பு: மகளிர் உரிமைத் தொகை தொடருமா?

திறந்த கடைகளில் அலைமோதிய கூட்டம்
பல இடங்களில் கடைகள் மூடப்பட்டதால், திறந்திருந்த சில கடைகளில் குடிமகன்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. முண்டியடித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளின் முன்பு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

3 பேர் சஸ்பெண்ட்… ‘டிஸ்மிஸ்’ மெமோ பாய்ச்சல்
அரசின் உத்தரவை மீறி, முன்னறிவிப்பு இன்றி தன்னிச்சையாகக் கடைகளை மூடிப் போராட்டம் நடத்திய ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நள்ளிரவில் அதிரடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. கடைகளை மூடக் காரணமாக இருந்த 3 ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடைகளை அடைத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு அவசர மெமோ அனுப்பப்பட்டுள்ளது. அதில், “முன்னனுமதியின்றி கடமைகளைத் தவறிய உங்களை ஏன் பணியில் இருந்து நிரந்தரமாக ‘டிஸ்மிஸ்’ செய்யக் கூடாது?” என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இறுதி எச்சரிக்கை
அரசின் உத்தரவை மீறி, சதி வேலைகளில் ஈடுபட்டு கடைகளை மூடிய ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். தவறினால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்று அமைச்சர் விக்னேஷ் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  "காத்திருப்போர் பட்டியலிலிருந்து ஒலிம்பிக் மிஷனுக்கு! களமிறங்கிய சிங்கம் மயில்வாகனன் IPS!

அதே நேரத்தில், டாஸ்மாக் கடைகளின் மின்சாரக் கட்டணம் மற்றும் பராமரிப்புச் செலவுகளை இனி நிர்வாகமே ஏற்கும் என்றும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஊழியர்களிடம் பணம் கேட்கக் கூடாது என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி ஊழியர்களைச் சாந்தப்படுத்தவும் அரசு முயன்றுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் அரசின் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago