Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tearful Video

தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் புதிய திருப்பமாக, கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்றும், சிறை நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பிரச்சினைகளை நீதிபதியிடம் எடுத்துரைத்து நீதிமன்றத்தில் சரணடைவதற்காகவே தாங்கள் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் பேசியுள்ள மீனாட்சி சுந்தரம், தாங்கள் 21 பேர் ஒன்றாகச் சேர்ந்து சிறையிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாகவும், யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்துவது தங்களது நோக்கமல்ல என்றும் கூறியுள்ளார். சிறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நீதிபதியிடம் தெரிவித்து சரணடைவதே தங்களது திட்டமாக இருந்ததாகவும், சிறையில் தொடர்ந்து இருக்க விரும்பாததால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறையில் தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இரவு நேரத்திலும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதற்குப் பதிலாக அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதுடன், துன்புறுத்தல்களும் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறையில் வழங்கப்படும் உணவு மிகவும் மோசமாக இருப்பதாகவும், உணவில் புழுக்கள் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களைச் சிறை அலுவலர்கள் பறித்துக்கொள்வதாகவும், உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்குவதிலும் பணம் பறிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கைதிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களைத் தனிமைச் சிறையில் அடைத்து தண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  ‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு: சைபர் கிரைம் அதிரடி வேட்டை… அடுத்தடுத்து சிக்கும் முக்கிய குற்றவாளிகள்!

சிறைக்குள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில்தான் வெளியேறியதாகவும், தப்பியோடியது தவறு என்பதை உணர்ந்துள்ளதாகவும் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். நீதிபதியிடம் நேரடியாகச் சென்று சிறையில் நடந்தவற்றை எடுத்துரைத்துவிட்டு சரணடையத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தனது குடும்ப நிலை குறித்துப் பேசிய அவர், தனக்குத் திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், வாழ வேண்டும் என்ற ஆசையில்தான் மீண்டும் வெளியே வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினருக்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடையூறும் ஏற்படுத்த மாட்டேன் என்றும், தன்னைச் சுட்டுப் பிடிக்கப்போவதாகக் கூறப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தனது தம்பிக்குத் தொடர்பில்லை என்றும், அவரை முக்கியக் குற்றவாளியாகச் சித்தரிப்பது தவறு என்றும் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். தனது தம்பி எந்தத் தவறும் செய்யவில்லை என்பதற்குச் சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளே ஆதாரமாக இருக்கும் என்றும், அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  ரெய்டு வரப்போகுது லீவ் போட்ரு..! லீக் ஆகும் விஜிலென்ஸ் சீக்ரெட்ஸ்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் சாதிப் பாசம்..?

தப்பியோடிய கைதிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியிருப்பதாகவும், தற்போது இரண்டு பேர் மட்டும் சிக்காமல் இருப்பதால் அனைத்துப் பழிகளும் தங்கள் மீது சுமத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகியோரின் தாயார் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவிலும் சிறை நிர்வாகம் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தங்களது மகன்கள் உள்ளிட்ட கைதிகளுக்குச் சிறையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், உணவில் புழுக்கள் இருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாறாகக் கைதிகள் தாக்கப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களைச் சிறை அலுவலர்கள் பறித்துக்கொள்வதாகவும், கைதிகளைச் சந்திக்க அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் மற்றும் பணம் பறிப்பு நடைபெறுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைக்குள் கைதிகள் அனுபவித்ததாகக் கூறப்படும் இந்தத் துன்புறுத்தல்களே அவர்கள் தப்பியோடுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, மீனாட்சி சுந்தரம் மீண்டும் காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னர் தேனி சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைக் காவலர்கள் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக உரிய மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதையும் படியுங்க  பாடத்தை படிக்கப் போறோமோ இல்லையோ... பாசமான ஃபிரண்ட்ஸை பார்க்கப் போறோம்!

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனது மகனுக்குப் பாதுகாப்பும் உரிய மருத்துவச் சிகிச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாயார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கைதி மீனாட்சி சுந்தரத்தின் வீடியோவும், அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஒருபுறம் கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியது தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் சிறைக்குள் உணவு வழங்குவதில் முறைகேடு, கைதிகள் மீதான தாக்குதல், உறவினர்களைச் சந்திப்பதில் பிரச்சினை உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு உண்மை நிலவரம் வெளிவர வேண்டும் என்பதே கைதிகளின் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago