மகளிர் உரிமைத் தொகை ₹1000 நாளை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நிதித்துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், ஏற்கனவே அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்தும், அதேபோல் வெள்ளை அறிக்கை தயாரிப்பு தொடர்பாகவும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் முக்கியமாக, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடருமா, மேலும் நாளைய தினம் பயனாளிகளுக்கு ₹1000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் நாளை ₹1000 வரவு வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர், தமிழ் வழியில் கல்வி கற்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ₹1000 தொகையும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது மகளிர் உரிமைத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசியல் தரப்புகளில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் ₹2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட அமலாக்கம் தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்திய முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருந்து வருகிறது. தற்போது ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் நிலையில், நாளை 15ஆம் தேதியையொட்டி வழக்கம்போல ₹1000 அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
