Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Schoolgirl

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவி மீது 21 வயது இளைஞர் ஒருவர் பவர் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கோபிகா என்ற மாணவியும், அவரைக் காப்பாற்ற முயன்ற லட்சுமி என்ற மற்றொரு மாணவியும் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் கோபிகா உயிரிழந்துவிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், பின்னர் கிடைத்த தகவல்களின்படி இரு மாணவிகளும் உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு மண்டலத்தில் உள்ள இந்தப் பள்ளியில், அக்டோபர் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர், கோபிகாவின் தூரத்து உறவினரான 21 வயது ஹேமந்த் என்கிற டும்மு என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் தர்மவரம் பகுதியைச் சேர்ந்தவர். மாணவியை நீண்ட நாட்களாகத் தொல்லை செய்து வந்ததாகவும், அவர் மீது காதல் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  மாணவர் சக்திக்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு! 20 நாள் போராட்டத்திற்கு கிடைத்த மாஸ் வெற்றி! 

ஆனால், ஹேமந்தின் காதல் விருப்பத்தை மாணவி நிராகரித்ததுடன், இதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் அளிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த், மாணவியைத் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், கையில் பவர் ரம்பத்துடன் வந்த ஹேமந்தை, வேலைக்காக வந்த ஊழியர் என நினைத்து ஆசிரியர்கள் உள்ளே அனுமதித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, சனிக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் பவர் ரம்பத்துடன் திடீரென உள்ளே நுழைந்த ஹேமந்த், கோபிகாவின் முகம், கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அவரைத் தடுக்க முயன்ற லட்சுமி என்ற மற்றொரு மாணவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கோபிகாவின் வலது கை துண்டிக்கப்படும் அளவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வகுப்பறைக்குள்ளேயே கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த சக மாணவ, மாணவிகள் பலர் கடும் அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளாகி மயங்கி விழுந்துள்ளனர். காயமடைந்த இரு மாணவிகளும் உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  சட்டமன்றத்தில் நாற்காலிச் சண்டை..! ஆந்திராவில் தொழிற்சாலை வேட்டை..! ஏமாறுகிறதா தமிழக இளைஞர் கூட்டம்? 

அவர்களுக்குத் தேவையான உயர்தர மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு ஆந்திர முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவிகளின் சிகிச்சையை அவர் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர உள்துறை அமைச்சர் வி. அனிதாவும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய ஹேமந்தைத் தேடி காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இவ்வளவு பெரிய பவர் ரம்பத்தை எடுத்துக்கொண்டு ஒருவர் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து, வகுப்பறை வரை சென்றது எப்படி என்றும், பள்ளி நிர்வாகமும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களும் அவரை ஏன் தடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி, மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி முன்பு திரண்டு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருந்ததா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படியுங்க  ஐஸ்வர்யா ராய் பாட்டுக்கு சஸ்பெண்ட் ஆக்ஷன்! பள்ளி பாடப்புத்தகத்தில் பாலிவுட் கூத்து!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago