முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைது செய்ததைப் பற்றி சட்டசபையில் களேபரமான விவாதம் நடந்தது. அதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, ”தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என ஒரு வரலாறு இருக்கிறது. முதலமைச்சராக கலைஞர் இருந்தாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தாலும் ஆக்கப்பூர்வமான, முதிர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பார்கள். சிற்றரசு பேசும்போது மகா நடிகன் என்று சொன்னார்.
ஆனால் அவர் மகா நடிகர் இல்லை. தொட்டபெட்டா மலை மேல முட்டை பரோட்டா என பாடியவர் மகா நடிகனா?. சினிமாவின் மூலம் ஒரு நடிகனாக மக்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? மக்களுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் விஷயம். நீங்கள் மகா நடிகன் அல்ல. மகா அயோக்கியன். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம், மூளையில் இருக்கக்கூடாது… இப்போது ஒருவர் இதற்காகச் சிறைக்குப் போகவில்லை. அதற்காகப் போகவில்லை எனப் பேசுகிறார். எனக்குக்கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா? நீ என் தலைவனின் தியாகத்தைச் சந்தேகிக்கும் போது, நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். வழக்குப் போட்டுக்கொள்”ன்னு ஆவேசமா பேசியிருந்தார்.

இதனையடுத்து, அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகக் கோரி காவல் துறை தரப்பில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகிய இருவரும் நேற்றைய தினம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.
முதலில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விசாரணைத் தொடங்கியது. “அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது? கூட்டத்தை எப்படி ஏற்பாடு செய்தீர்கள்?” என போலீசார் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மா.சுப்பிரமணியன், “நாங்கள் காவல் துறையின் அனுமதியை மீறி எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. சொல்லப்போனால், உங்கள் காவல் துறைதான் எங்கள் கூட்டத்திற்குப் பாதுகாப்பே வழங்கியது!” என்று தகுந்த ஆதாரங்களுடன் பதில்களை அடுக்கினார். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதுவரை ஆ.ராசா அமைதியாகக் காத்திருந்தார்.
மா.சுப்பிரமணியனின் விசாரணை முடிந்ததும், ஆ.ராசாவிடம் விசாரணையைத் தொடங்கினர் போலீசார். ஆரம்பத்திலேயே வழக்கமான பாணியில் “உங்கள் பெயர் என்ன?” “மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர் என்ன?” “குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?” “சொந்த ஊரில் எவ்வளவு நிலம் இருக்கிறது?” எனக் குடும்ப பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பாகவே 70-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு விசாரணையைத் தொடங்கினர்.
கிடுக்குப்பிடி போட்ட ஆ.ராசா
குடும்ப விவரங்களைக் கேட்டு முடித்ததும், வழக்கின் முக்கியக் கருப்பொருள் நோக்கி போலீசார் நகர முயன்றனர். ஆனால், அங்குதான் ஆட்டமே மாறியது. வழக்கறிஞரான ஆ.ராசா, காவல் துறையினரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, அவர்களையே தன் எதிர் கேள்விகளால் திணறடிக்கத் தொடங்கினார்.
ஆ.ராசா: “நான் மோசமாகப் பேசினேன் என்று சொல்கிறீர்களே… அப்படி நான் என்ன பேசினேன்?”
போலீசார்: “நீங்கள் அம்மாவைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறீர்கள் சார்…”
ஆ.ராசா: “யாருடைய அம்மாவைப் பற்றித் தப்பாகப் பேசினேன்?!” இந்தக் கேள்விக்குக் காவல் துறை தரப்பில் எந்தவொரு தெளிவான பதிலும் வரவில்லை. சட்டெனப் பதற்றமான போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
விடாத ஆ.ராசா, கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். “என்னுடைய பேச்சில் இன்னாருடைய அம்மா என்று யாரையாவது குறிப்பிட்டுப் பேசியிருக்கிறேனா? என் எக்ஸ் பக்கத்தில் இன்னாருடைய அம்மாவைப் பற்றிப் பேசிவிட்டேன், அந்த வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன் என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?” “யாராவது ‘என்னுடைய அம்மாவை இவர் இப்படிப் பேசிவிட்டார்’ என்று என் மீது புகார் கொடுத்திருக்கிறார்களா?” “அப்படி புகார் வந்திருந்தால், அந்தப் புகாரின் நகலை எனக்கு ஏன் கொடுக்கவில்லை?” “சரி… என் மீது எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எஃப்.ஐ.ஆர் காப்பியை ஏன் எனக்குத் தரவில்லை?”
“முதலில் நான் யாரைப் பற்றித் தப்பாகப் பேசினேன் என்றே நீங்கள் சொல்லாதபோது, எதை வைத்து என்னிடம் இவ்வளவு கேள்விகளைக் கேட்கிறீர்கள்?” ஆ.ராசாவின் இந்த அடுக்கடுக்கான சட்டரீதியான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் காவல் நிலையமே திணறிப்போனது.
நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த போலீசார், “கொஞ்சம் இருங்கள் சார்…” என்று கூறிவிட்டு, உடனடியாக உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போன் போட்டனர். அங்கு சுருக்கமாக ஆலோசித்துவிட்டு, மீண்டும் ஆ.ராசாவிடம் வந்து வேறு கோணத்தில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
ஆனால், ஆ.ராசா மீண்டும் அதே கிடுக்குப்பிடியைப் போட்டார். “என் மீது என்ன கேஸ்? யாரோட அம்மாவைத் தப்பா பேசுனேன்? என் மேல இருக்கிற கம்ப்ளெயின்ட் என்ன? அந்த காபி எங்கே? ஏன் எனக்குக் கொடுக்கல?” எனக் கேட்டுள்ளார்.

மீண்டும் காவல் துறை தரப்பில் மௌனமே பதிலாக அமைந்தது. வேறு வழியின்றி மீண்டும் கமிஷனர் ஆபீஸுக்கு போன் செய்து விளக்கங்களைக் கேட்க வேண்டியதாயிற்று. இப்படியாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நாடகம் நீடித்தது.
தீவிர ஆலோசனையில் காவல் துறை
விசாரணை முடிந்து இருவருமே கிளம்பிச் சென்றுவிட்ட போதும், ஆ.ராசா கேட்ட அந்த அடிப்படையான கேள்விகளுக்குக் காவல் துறை தரப்பில் கடைசி வரை எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
ஆ.ராசா உண்மையில் யாரைக் குறிப்பிட்டுப் பேசினார்? அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் உண்மைத்தன்மை என்ன? சட்டரீதியாக இந்த வழக்கை அடுத்து எவ்வாறு நகர்த்துவது? என்பது குறித்து தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளும், காவல் துறையின் சட்ட வல்லுநர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
