மதுராந்தகம் -தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மதுராந்தகத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தாராபுரத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாகவும் பதிவான அதிக வாக்குப்பதிவு, அரசியல் கட்சிகளின் நெஞ்சில் திக் திக் என பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆளும் கட்சிக்கு இடைத்தேர்தல் என்பது எளிதான களமாகவே பார்க்கப்படும். ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டதாக கூறப்படும் தீவிர பிரச்சாரமும், உழைப்பும் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது, கிராமத்து டீக்கடைகளில் அமர்ந்து டீ குடிப்பது என இதுவரை விஜய் மேற்கொண்டிராத அளவுக்கு பல்வேறு களப்பணிகளில் அவர் ஈடுபட்டார். அவரை இந்த அளவுக்கு களத்தில் இறங்க வைத்தது எது என்ற கேள்வி எழுந்த நிலையில், கட்சி தாவி வந்த வேட்பாளர்கள் மீதான தொகுதி மக்களின் அதிருப்தியே இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

கட்சி தாவியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா ஆகியோருக்கே தவெகா சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், களத்தில் இந்த முடிவு தவெகாவுக்கு சாதகமாக அமையவில்லை என கூறப்படுகிறது. “ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிக்கு உடனே தாவிவிட்டார்களே… இவர்களுக்கு மக்கள் சேவையைவிட பதவிதான் முக்கியமா?” என்ற கடுமையான சலிப்பும் கோபமும் தொகுதி மக்களிடையே அடிமட்ட அளவில் எதிரொலித்தது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மக்கள், பிரச்சாரத்திற்கு வந்த வேட்பாளர்களை கிராமங்களுக்குள் வரவிடாமல் கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது. மேலும், தவெகவின் சொந்த கட்சி தொண்டர்களே கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கியதை முழுமனதாக ஏற்காமல் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.
விஜயை தீவிர பிரச்சாரத்திற்கு தள்ளிய எதிர்ப்பு
வேட்பாளர்கள் மீது மக்கள் காட்டியதாக கூறப்படும் இந்த எதிர்ப்புதான் முதலமைச்சர் விஜயை வழக்கத்திற்கு மாறாக தீவிரமாக பிரச்சாரம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. பொதுத்தேர்தலின்போது மேடைகளில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு சென்ற விஜய், இந்த இரண்டு தொகுதிகளுக்காக தனது வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஓய்வைக் கூட ரத்து செய்துவிட்டு தொடர் ரோடு ஷோ மேற்கொண்டார்.
அமைச்சரவை மொத்தத்தையும் தொகுதியிலேயே முகாமிட வைத்து, முதல்வரே கிராமம் கிராமமாக மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, இந்த இரண்டு தொகுதிகளும் தவெகவுக்கு எவ்வளவு கடுமையான சவாலாக மாறியிருந்தன.
வேட்பாளர்களின் செல்வாக்கு போதுமானதாக இல்லாத நிலையில், தனது சொந்த செல்வாக்கை மட்டுமே நம்பி வாக்குகளை இழுக்க விஜய் கடுமையாக போராட வேண்டியதாக கூறப்படுகிறது.

தவெகவுக்கு அடுத்த சவால்?
அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த மற்ற எம்எல்ஏக்களின் தொகுதிகள் உட்பட, இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டியுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் நிலைமையும் தற்போது தவெக தலைமையின் கவலையாக மாறியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய ஆறு முக்கிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இதில் அதிமுகவைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.ஜெயகுமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரின் தொகுதிகள் காலியாக இருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் கொடுத்த பாடம்
மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல் அனுபவங்கள் விஜய்க்கு ஒரு கசப்பான பாடத்தை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சி தாவி வந்தவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால், மக்கள் அவர்களை “துரோகிகள்” என பார்க்கிறார்களே தவிர, மாற்றத்திற்கான தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்ற கருத்து இந்த தேர்தல் களத்தில் எதிரொலிக்கிறது.

மதுராந்தகமும் தாராபுரமும் கொடுத்த கடும் நெருக்கடிக்கு பிறகு, கட்சி தாவியவர்களை வைத்து தனிப் பெரும்பான்மை பெறலாம் என்ற தவெகாவின் கணக்கு, அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, இனி வரும் இடைத்தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு எந்த அடிப்படையில் இருக்கும்? கட்சி தாவி வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது கட்சியின் சொந்த நிர்வாகிகள் மற்றும் களத்தில் நீண்டகாலமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தவெக வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
