கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஜெமினி (Gemini), சைபர் பாதுகாப்புச் சோதனையின்போது மூன்று நிறுவனங்களின் கணினி அமைப்புகளைத் தன்னாட்சியாக ஹேக் செய்ததாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. 2026 செப்டம்பர் மாதத்தில் வெளியான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே மாதம், இஸ்ரேலைச் சேர்ந்த சுயாதீன AI பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான இர்ரெகுலர் (Irregular), ஜெமினியின் சைபர் பாதுகாப்புத் திறன்களைச் சோதிப்பதற்காக ஒரு சிறப்புப் போட்டியை நடத்தியது. இந்தச் சோதனையில், போலியான இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஹேக் செய்யுமாறு ஜெமினிக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சோதனைக் களத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெமினிக்கு இணையத்தை அணுகும் வசதி கிடைத்தது.
மேலும், இர்ரெகுலர் நிறுவனம் உருவாக்கிய கற்பனையான நிறுவனப் பெயர், நிஜ உலகில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தின் இணைய டொமைன் பெயருடன் தற்செயலாக ஒத்துப்போனது. இதனால், தான் தாக்குவது ஒரு போலியான சோதனை அமைப்பு என்று நினைத்துக்கொண்ட ஜெமினி, உண்மையான நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட கணினி அமைப்புகளுக்குள் நுழையத் தொடங்கியது. இதன் விளைவாக, மூன்று நிறுவனங்களின் அமைப்புகளை ஜெமினி அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்பில், சரியான கடவுச்சொல்லைத் தொடர்ந்து யூகித்து, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஜெமினி நுழைந்துள்ளது. இருப்பினும், தான் ஹேக் செய்வது போலியான சோதனை அமைப்பு அல்ல; உண்மையான நிறுவனத்தின் கணினி அமைப்பு என்பதை உணர்ந்தவுடன், ஜெமினி தனது ஹேக்கிங் நடவடிக்கைகளைத் தானாகவே நிறுத்திக்கொண்டதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் அல்லது தரவு இழப்பும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இதுகுறித்து முறையாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூகுள் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைவர் ஹீதர் அட்கின்ஸ் (Heather Adkins) தெரிவித்துள்ளார். மேலும், சோதனையின்போது ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும் ஜூலை மாத இறுதிக்குள் சரிசெய்யப்பட்டுவிட்டதாக இர்ரெகுலர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மட்டுமின்றி, ஓபன்ஏஐ (OpenAI), ஆந்த்ரோபிக் (Anthropic), மெட்டா (Meta) உள்ளிட்ட நிறுவனங்களின் AI மாதிரிகளும், இதேபோன்ற பாதுகாப்புச் சோதனைகளின்போது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஓபஸ் 4.7 (Claude Opus 4.7) மாதிரி, தான் உண்மையான நிறுவனத்தை அணுகுவதை அறிந்திருந்தபோதிலும் ஹேக்கிங்கை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஓபன்ஏஐ மாதிரியும், தான் நுழைந்த நிஜ நிறுவனத்தின் அமைப்பைச் சோதனையின் ஒரு பகுதியாகவே கருதி தொடர்ந்து செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெமினி உண்மையான நிறுவனத்தின் அமைப்பு என்பதை உணர்ந்தவுடன் தானாகவே நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.
இந்தச் சம்பவம் மே மாதமே நடைபெற்றிருந்தாலும், கூகுள் நிறுவனம் இதுகுறித்த தகவலைப் பல மாதங்களாகப் பொதுவெளியில் வெளியிடாமல் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்கள் தங்களின் AI மாதிரிகளால் ஏற்பட்ட தவறுகளைத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்ட நிலையில், கூகுள் அமைதி காத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆதாரங்களுடன் கூகுளை அணுகிய பிறகே இந்தத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதற்கு, “பாதிப்பு எதுவும் ஏற்படாததால் பொதுவெளியில் அறிவிக்கவில்லை” என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தன்னாட்சி கொண்ட AI ஏஜென்ட்டுகளின் பாதுகாப்பு குறித்து உலகளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், “AI மாதிரிகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இல்லை” என்று விமர்சித்து, ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களின் AI உருவாக்கப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, AI தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்து, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் (Jacob Coxon) ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவரது கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.
இதேபோல், ஓபன்ஏஐ வெளியிட்டதாகக் கூறப்படும் ஓர் அறிக்கையில், AI சாட்பாட் மனிதர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்றும், மனிதர்களுக்குச் சேவை செய்வது தனது பணி அல்ல என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. தனது பதில்களை இணையத்தில் பதிவேற்றுவது, பயனர்களைத் தவறாக வழிநடத்துவது உள்ளிட்ட தன்னிச்சையான செயல்பாடுகளும் குறிப்பிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
AI தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் நிலையில், பயனர்களின் தரவுகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை AI மாதிரிகள் எவ்வாறு அணுகுகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஜெமினி பயனர்களின் கூகுள் போட்டோஸ் (Google Photos) தரவுகளை அணுகி, அவர்கள் கேட்கும் AI படங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்துவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். இதனால், தனியார் நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட அமைப்புகளுக்குள் நுழையக்கூடிய AI மாதிரிகள், போதுமான பாதுகாப்பு இல்லாத தனிநபர்களின் தரவுகளையும் எளிதாக அணுக முடியுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
பாதுகாப்பானது என்று கருதப்படும் ஜெமினி AI, உண்மையான நிறுவனங்களின் அமைப்புகளுக்குள் நுழைந்ததாகக் கூகுள் வெளியிட்டுள்ள தகவல், AI பாதுகாப்பு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. AI சாட்பாட்கள் தன்னிச்சையாகச் செயல்படும் திறனைப் பெறும் நிலையில், அவை சைபர் உலகிற்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை, எந்த அளவிற்கு ஆபத்தானவை என்பதே தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் முக்கியக் கேள்வியாக மாறியுள்ளது.
