கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை, மேல்புறம் முதல் குழித்துறை மற்றும் பம்மம் முதல் குழித்துறை வரை உள்ள 11 இடங்களில் நடைபெற உள்ளது.
எனவே இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்) மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி, முடியும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
