கரூர் மாவட்டத்தை அடுத்த நெரூர் வடபாக்கம் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (32). திருமணமான இவர், வெங்கமேடு திட்டச்சாலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி மோகன்ராஜும் அந்த இளம்பெண்ணும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை அந்த இளம்பெண்ணின் சகோதரி 17 வயது சிறுமி பார்த்துள்ளார். இதனையடுத்து சகோதரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் 17 வயது சிறுமி திடீரென மாயமானார்.
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் அக்கா மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது எங்களது கள்ளத்தொடர்பை சிறுமி பார்த்துவிட்டார். இடையூறாக இருக்கும் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று சிறுமியை கொலை செய்து, புதூர் சாலை பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசினேன் என்றார். இதனையடுத்து மோகன்ராஜை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் வாய்க்காலில் தேடினர்.
அப்போது வாய்க்காலில் புதர் நிறைந்த பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் அவரது அக்காவுக்கும் மற்றும் வேறு யாராக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
