தமிழகத்தில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை வானிலை எப்படி இருக்கும், எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம். அதில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று உட்பட அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மிக நல்ல மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
வெள்ளம் ஏற்படும் அளவிற்கெல்லாம் பாதிப்புகள் ஏதுவும் இருக்காது. ஓரிரு இடங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும், என்றாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது சென்னைக்குத் தேவையான மழையாகவே இது அமையும். காலையில் வெயிலும் புழுக்கமுமாகத் தொடங்கி, மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.
காலை வேளை வெயிலுடன் பிரகாசமாகத் தொடங்கினால், மாலை நேரத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டால், மழையின் தாக்கம் இரவு நேரத்திற்கு மாறக்கூடும்.
அடுத்த சில நாட்களில் வானிலை இத்தகைய போக்கிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் மழை இல்லாமலும் வறண்ட நிலையிலும் இருந்ததால், இந்த மழையை நாம் மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் என தெரிவித்துள்ளார்.
