மனுதாரர்கள் அளித்த புகார்கள் மீதான அமலாக்கத்துறை (ED) விசாரணையின் வேகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்குகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது மற்றும் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் மொத்தம் 8,851 புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும், அவற்றில் வெறும் 60 வழக்குகள் மட்டுமே நீதிமன்ற விசாரணை நிலையை எட்டியுள்ளதாகவும் அல்லது விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

8,851 புகார்களில் வெறும் 60 வழக்குகள் மட்டுமே நீதிமன்ற விசாரணை நிலையை எட்டியிருப்பது அல்லது முடிக்கப்பட்டிருப்பது தற்போது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இது அமலாக்கத்துறையின் ஒட்டுமொத்த வழக்குப்பதிவுகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான புகார்கள் பதிவு செய்யப்பட்டும், அவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளே நீதிமன்ற விசாரணை நிலையை எட்டியிருப்பது, நாட்டின் முக்கிய மத்திய விசாரணை அமைப்பின் வழக்குகளின் வேகம் மற்றும் அதன் முடிவுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு முக்கிய வழக்குகளில், சிபிஐ அல்லது உள்ளூர் போலீசார் பதிவு செய்யும் ‘அடிப்படை வழக்கு’ எனப்படும் Predicate Offence ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலோ, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து மேற்கொள்ளும் வழக்கும் செல்லாததாகிவிடும் என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன. வழக்குகள் முடிவடைவதில் இது ஒரு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், அடிப்படை ஆதாரம் இல்லாத சோதனைகளின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகார வரம்பை மீறுவதாகவும் அண்மைக்காலமாக நீதிமன்றங்கள் எச்சரித்து வருகின்றன. சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி விசாரணை நடத்தியதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்பான இந்த புள்ளிவிவரம் தற்போது அரசியல் ரீதியாகவும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில அரசுகள், மத்திய அரசு தங்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை அரசியல் பழிவாங்கலுக்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதனால்தான் நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை நிரூபிக்க முடியாமல் போகிறது என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இந்த புள்ளிவிவரத்தை முன்வைத்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) அனில் கௌஷிக், இந்த புள்ளிவிவரம் சரியாக இருக்க வாய்ப்பில்லை என உடனடியாக மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபால் சங்கரநாராயணன், இந்த புள்ளிவிவரம் அமலாக்கத்துறையின் சொந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ விவரம்தான் என நீதிமன்றத்திலேயே வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 8,851 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், அவற்றில் வெறும் 60 வழக்குகள் மட்டுமே முழுமையான நீதிமன்ற விசாரணை (Trial) நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவாதத்தை லைவ் லா தளம் சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் அமலாக்கத்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் பரவலாக எழுந்துள்ளன. குறிப்பாக, “ED = Enforcement Dysfunction” என அமலாக்கத்துறையை விமர்சிக்கும் கருத்துகளும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
மத்திய விசாரணை அமைப்பின் செயல்பாட்டுத் திறனை கேள்விக்குள்ளாக்கும் வகையில், அதன் சொந்த தரவுகளே தற்போது அதற்கு எதிரான விவாதத்துக்கு காரணமாக மாறியிருப்பது இந்த விவகாரத்தின் முக்கிய சட்டப் பின்னணியாக பார்க்கப்படுகிறது.
