Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gpay

கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக போலி ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி, கடை ஊழியரை ஏமாற்றி ரூ.35 ஆயிரம் பணத்தை சுருட்டிய தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை மணலி புதுநகர் போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

ரூ.350 கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூ.35 ஆயிரத்தை இழந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை மணலி புதுநகர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த இசை, 29, அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 8-ஆம் தேதி கடையின் உரிமையாளர் வெளியே சென்றிருந்த நேரத்தில், வழக்கம் போல் இசை கடையில் பணியில் இருந்துள்ளார்.

அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடைக்கு வந்து, தனது அவசரத் தேவைக்காக ரூ.35 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், அதற்கான கமிஷன் தொகையுடன் சேர்த்து கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பிவிடுவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடை உரிமையாளர் பாண்டியனிடம் கேட்டபோது, தற்போது கடையில் ரூ.35 ஆயிரம் மட்டுமே ரொக்கப் பணம் கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை அந்த வாடிக்கையாளரிடம் இசை தெரிவித்தபோது, கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.35,350 பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பிவிட்டதாகக் கூறிய அந்த நபர், அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் காண்பித்துள்ளார்.

இதையும் படியுங்க  விவசாயிகளுக்கு இலவசம் - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!”

அந்த ஸ்கிரீன்ஷாட்டை நம்பிய கடை ஊழியர் இசை, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்காமல், கடையில் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கப் பணத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபர், தான் வந்த அதே காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, பணம் வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடை ஊழியர் ஏமாற்றப்பட்டிருப்பதும், மோசடி நடைபெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இசை, மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த நபர் வாடகைக் காரில் கடைக்கு வந்து மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையும் படியுங்க  "கிலோ அரிசி ₹300? தமிழ்நாட்டை மிரட்டும் பேராபத்து! பின்னணியில் இருக்கும் அதிரடி அரசியல்!"

இதையடுத்து, வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு காரின் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தமக்கும் அந்த நபருக்கும் முன்பின் பழக்கமோ, தொடர்போ எதுவும் இல்லை என்றும், அவர் வாடிக்கையாளராக மட்டுமே அறிமுகமானவர் என்றும் கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபரை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் இரவு நேரத்தில் இறக்கிவிட்டதாகவும், போலீசார் உடனடியாக அழைத்துச் சென்றால் அந்த விடுதியை அடையாளம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கார் ஓட்டுநரை கோயம்பேட்டுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் குறிப்பிட்ட விடுதியைக் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினர் அங்கு சென்றபோது, அந்த நபர் விடுதியைக் காலி செய்துவிட்டு தனது உடைமைகளுடன் அங்கிருந்து தப்பிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சபரி என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், சபரி பொறியியல் பட்டதாரி என்பதும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதேபோல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படியுங்க  "அந்த வீடியோ தான் க்ளூ…!" தருமபுரியில் 9-ஆம் வகுப்பு மகளையும் மனைவியையும் தீர்த்துக்கட்டிய தந்தை… லாரி முன் பாய்ந்த பகீர் பின்னணி!

மேலும், கடைகளுக்குச் சென்று கியூஆர் கோடு மூலம் பணம் அனுப்புவதைப் போல நாடகமாடி, பணம் செலுத்தியதற்கான போலி ஸ்கிரீன்ஷாட்டைக் காண்பித்து ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மணலி புதுநகர் போலீசார் மோசடி வழக்கில் சபரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் எச்சரிக்கை

சிறு வியாபாரிகள் மற்றும் மணி டிரான்ஸ்பர் கடை நடத்துவோர், கியூஆர் கோடு மூலம் பணம் பெறும்போது, வாடிக்கையாளர் பணம் அனுப்பியதாகக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் நம்பாமல், பணம் உண்மையாகவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே ரொக்கப் பணத்தை வழங்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோன்று போலீஸ் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி மோசடி செய்வதும், போலி செயலிகள் மூலம் பணம் அனுப்பியதாகக் காட்டி ஏமாற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 hours ago at 20 hours ago