https://republictn.com/

‘புதிய மாற்றம் படைப்போம்’ என்று முழக்கமிட்டு ஆட்சிக்கட்டிலில் ஏறிய முதல்வர் விஜய், தனது முதல் அடியிலேயே சறுக்கி இருப்பதாக ஐஏஎஸ் வட்டாரங்கள் குமுறுகின்றன. தமிழக நிர்வாக இயந்திரத்தைச் சீரமைக்கப் போகிறேன் என்று சொல்லி, அதிகாரிகளை மாற்றிய விதம், “இது த.வெ.க ஆட்சியா? அல்லது திமுக – அதிமுகவின் ‘நிழல்’ ஆட்சியா?” என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக கோட்டை வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.

சுகாதாரத் துறையில் பணியாற்றிய செந்தில்குமார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகவும், ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்த லட்சுமி பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளராகவும், நிதித்துறை மேலாண்மை இயக்கநராக இருந்த சென்னை மெட்ரோ ரயில் என். முருகானந்தம், நிதித்துறை மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எம். ஏ. சித்திக் நிதித்துறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். முன்னாள் நிதித்துறைச் செயலாளர் கே. நந்தகுமார் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக்கப்பட்டுள்ளார். அருண் தம்புராஜ் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் டாக்டர். தாரேஸ் அகமது, சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிற்துறை செயலாளராக விஜயகுமார், உயர் கல்வித் துறை செயலாளராக அருண் ராய், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன், சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம், மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ், கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி, தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக-அதிமுகவின் செல்லப் பிள்ளைகள்
முதலமைச்சர் அலுவலகம் முதல் முக்கியத் துறைகள் வரை நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பட்டியலைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் கடந்த திமுக- அதிமுக ஆட்சிகளில் மிக முக்கியமான, ‘அதிகாரம் மிக்க’ பதவிகளை அலங்கரித்தவர்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

எம்.ஏ. சித்திக், என். முருகானந்தம், விஷ்ணு போன்ற அதிகாரிகள் முந்தைய ஆட்சிகளில் நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் செல்வாக்கு செலுத்தியவர்கள். திமுக ஆட்சியில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்த விஷ்ணு ஐஏஎஸ், இப்போது விஜய்யின் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

“மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்கள், புதிய சிந்தனை கொண்ட அதிகாரிகளையல்லவா எதிர்பார்த்தார்கள்? மீண்டும் அதே பழைய முகங்களை வைத்துக்கொண்டு விஜய் என்ன புதிய மாற்றத்தை நிகழ்த்தப் போகிறார்?” என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி.

ஐஏஎஸ் வட்டாரத்தில் குமுறல்!
தமிழகத்தில் திறமையான, நேர்மையான பல ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு ‘லாபி’ மட்டும் எப்படி எல்லா ஆட்சிகளிலும் முன்னிலை பெறுகிறது? திமுக ஆட்சியில் ‘முக்கியமானவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்கே விஜய் மீண்டும் சிகப்பு கம்பளம் விரிப்பது, மற்ற நேர்மையான அதிகாரிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

“எல்லா ஆட்சியிலும் நாங்களே தான் இருப்போம்” என்கிற அதிகார வர்க்கத்தின் மமதைக்கு விஜய் தீனி போடுகிறாரா? இதனால் மற்ற அதிகாரிகளின் ஊக்கம் சிதைந்து விடாதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது.

மதச்சாயம் பூசும் நிர்வாகப் பகிர்வு
தற்போதுள்ள நியமனங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. “அனைவருக்குமான ஆட்சி” என்று மேடையில் முழங்கிவிட்டு, நிர்வாக ரீதியான நியமனங்களில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. 80% இந்துக்கள் வாழும் மாநிலத்தில், நிர்வாகப் பொறுப்புகளில் அனைவருக்குமான பிரதிநிதித்துவம் சரியாக இருக்கிறதா என்பதை முதலமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டாரா அல்லது திட்டமிட்டுப் புறக்கணிக்கிறாரா? என கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய்யின் நிர்வாக மேஜிக் பலிக்குமா?
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்த விஜய், தற்போது அதே திராவிடக் கட்சிகளால் வளர்க்கப்பட்ட அதிகாரிகளைத் துணையாகக் கொண்டு ஆட்சி நடத்துகிறார். திராவிட மாடல் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, எப்படி த.வெ.க மாடல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?

அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையாத நிலையில், அதிகார வர்க்கத்தின் ‘பிடியில்’ விஜய் சிக்கிக் கொண்டதாகவே தெரிகிறது. “சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்று” என்கிற திராவிடக் கட்சிகளின் அதே பாதையில் விஜய்யும் பயணிக்கத் தொடங்கினால், புதிய அரசியல் என்பது வெறும் காகிதப் பூவாகவே மிஞ்சும்

இந்த நியமனங்கள் நிர்வாக வசதிக்காகச் செய்யப்பட்டதா? அல்லது உடனிருப்பர்வகளின் அழுத்தமா என்பது போகப் போகத் தெரியும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஐஏஎஸ் இடமாற்றம் விஜய்க்கு நிர்வாக ரீதியாகப் பெரும் சவாலாகவே அமையப்போகிறது என்பதே நிதர்சனம்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago