Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

MY-HOME’ Plan

தமிழக நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் நீண்ட நாள் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வகையில், ₹15,000 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட அடுக்குமாடி வீட்டுவசதித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மூலம் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீட்டுத் தேவையை சமாளிக்க பொது-தனியார் பங்களிப்பு முறையில் சுமார் ₹15,000 கோடி தனியார் முதலீட்டை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகரப் பகுதியில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற ஏழை, எளிய மக்கள், குறைந்த வருவாய் பிரிவினர், புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞர்கள், இளம் குடும்பங்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்காக நிலப்பகிர்வு முறையை வாரியம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, வாரியத்தின் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, அதில் அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் ஒரு பகுதி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்; மீதமுள்ள வீடுகளை தனியார் நிறுவனங்கள் பொது சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்ட அனுமதிப்பது உள்ளிட்ட சலுகைகள் பரிசீலனையில் உள்ளன.

இதையும் படியுங்க  "ரூ.13 லட்சம் கோடி கடன்… ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1.28 லட்சம் சுமை! தவெக அரசின் அதிரடி வெள்ளை அறிக்கை!"

தனியார் நிறுவனங்களை ஈர்க்க கூடுதல் ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்த முன்முடிவுகளும் விரைவில் வெளியாக உள்ளன. இதன் மூலம் கட்டுமானப் பணிகள் வேகமாக நிறைவடைவதுடன், தரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக அரசு நிதி மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டங்களில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பால் செலவு அதிகரித்துள்ளது.

இதனால் கூடுதல் நிதியைத் திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு உறைவிட நிதி’ (Tamil Nadu Shelter Fund) மூலம் சுமார் ₹3,500 கோடி ‘Viability Gap Funding’ ஆக அரசுத் தரப்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய வீடுகளுடன், ஏற்கனவே பழுதடைந்துள்ள 12,648 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை ₹2,883 கோடி செலவில் இடித்துவிட்டு புதிதாகக் கட்டும் திட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகளின் ஒதுக்கீடு, பராமரிப்பு, வாடகை வசூல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை டிஜிட்டல் மயமாக்க ₹75 லட்சம் மதிப்பில் புதிய ஸ்மார்ட் தளம் உருவாக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்க  "அமெரிக்கா சென்ற கணவன் மீது நடவடிக்கை கோரி புகார்: தாம்பரம் போலீசாரின் அலட்சியத்தால் நடுத்தெருவில் தவிக்கும் பெண்!"

நகர்ப்புற ஏழைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மலிவு விலை வீடுகளை எளிதாக வாடகைக்கு பெறும் வகையில், டிஜிட்டல் வாடகை வவுச்சர் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, நகர்ப்புற கட்டுமானங்கள் மற்றும் வீடுகளுக்கான திட்ட அனுமதிகளை விரைவாக வழங்க ‘SPEED’ (Single Platform for Efficient Expedited Development) என்ற AI அடிப்படையிலான தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் CMDA மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளை ஆன்லைனிலேயே பெற முடியும். சொந்த நிலத்தில் வீடு கட்டுவோருக்கான அரசு அலுவலக அலைச்சலைக் குறைக்கும் வகையில், சுய சான்றளிப்பு வரம்பு 3,500 சதுர அடியில் இருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஒதுக்கீட்டு முறையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கு ஆன்லைன் குலுக்கல் முறையும், விற்பனையாகாமல் உள்ள வீடுகளுக்கு ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற ஆன்லைன் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் நேரடியாகப் பயன்பெற முடியும்.

இதையும் படியுங்க  "டிஜிட்டல் இந்தியா காலத்துலேயும்.. பேனா, பேப்பருக்கு ரூ.3,877 கோடியா? வங்கிகளின் ஷாக்கிங் ரிப்போர்ட்!"

இதனிடையே, கிராமப்புறங்களில் கச்சா அல்லது கூரை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்காக ₹3,500 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு கட்டுவதற்கான அரசு நிதியுதவி ₹3.10 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், முதல் கட்டமாக 70,000 வீடுகள் கட்டப்பட உள்ளன.

மொத்தத்தில், தனியார் முதலீட்டை ஈர்த்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தை இணைத்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு தரமான, பாதுகாப்பான வீடுகள் விரைவாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மேலும், தமிழகத்தின் நகர்ப்புற கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago