Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தபடி, சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக கோயம்பேடு, நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாகக் கடலுக்கு அருகிலுள்ள பட்டினப்பாக்கம் பகுதி, குறிப்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் அமைந்துள்ள இடம், தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்கள் தங்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றப்பட நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

“இது எங்கள் தாத்தாவுடைய பூர்வீக இடம். எங்களை இங்கிருந்து வெளியேற்றக் கூடாது” எனக் கூறி, அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படுவதால் தங்களது பூர்வீக இடங்கள் மட்டுமின்றி, பாரம்பரிய தொழில், வியாபாரம் மற்றும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஸ்ரீநிவாசபுரம், பவானி குப்பம், டூமிங் குப்பம், நொச்சி நகர் உள்ளிட்ட 9 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,500 மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புதிய கட்டுமானத்தால் தங்களது மீன்பிடித் தொழில், படகுகள் மற்றும் வலைகளைப் பராமரிக்கும் இடங்கள், வாழ்விடங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படக்கூடும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "அந்த வீடியோ தான் க்ளூ…!" தருமபுரியில் 9-ஆம் வகுப்பு மகளையும் மனைவியையும் தீர்த்துக்கட்டிய தந்தை… லாரி முன் பாய்ந்த பகீர் பின்னணி!

“எங்களுடைய மீனவத் தொழில் சாதாரணத் தொழில் கிடையாது; அதுவும் ஒரு விவசாயம்தான். நாங்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதால், அதை வாங்கி விற்பவர்களும், அதை உணவாகச் சாப்பிடுபவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், பல தலைமுறைகளாக எங்கள் பூர்வீக இடத்தில் வாழ்ந்து வருகிறோம். திடீரென இங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக அறிவித்தால், அது யாருடைய இடம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; இது எங்கள் தாத்தா காலத்திலிருந்து இருக்கும் பூர்வீக இடம்” என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பழமையான பள்ளிகள் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அங்கு கல்வி பயின்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காலையிலும் மாலையிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்லும் நேரத்தில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, தங்களது பூர்வீக இடங்களிலேயே புதிய குடியிருப்புகளை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க  இடி மின்னலுடன் கனமழை வெளுத்துப் வாங்கப்போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

கடலுக்கு மிக அருகில் பட்டினப்பாக்கம் அமைந்துள்ளதால், திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலமான CRZ விதிகளின்படி தேவையான அனுமதிகள் பெறுவது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான ஆய்வுகள் மற்றும் பணிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதி, அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆலிவ் ரிட்லி கடலாமைகள் முட்டையிடும் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை முன்வைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கடலாமைகளின் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு ஆளுங்கட்சியான தவெக-வுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல், எதிர்க்கட்சிகளான பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சென்னைக்குள் ஏற்கனவே நிலவும் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்குப் பதிலாக, சென்னைக்கு வெளியே தனியாக ஒரு ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை உருவாக்குவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  மதுபோதையில் சில்மிஷம்… தட்டிக்கேட்ட பெண்கள் மீது பெட்ரோல் வீச்சு! போதை ஆசாமிக்கு தென்னை மட்டையால் தர்ம அடி..!

பட்டினப்பாக்கம் பகுதி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தற்போதைய இல்லத்திற்கு மிக அருகில் இருப்பதும் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நிர்வாக ரீதியாகப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் பார்க்கப்பட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஏற்கனவே நிலவும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதேபோன்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதேபோன்ற வகையில், தற்போதைய பட்டினப்பாக்கம் திட்டத்திலும் CRZ விதிகள், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் அரசுக்கு சவாலாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருபுறம், நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசின் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் தங்களது பூர்வீக வாழ்விடங்கள், மீன்பிடித் தொழில், வியாபாரம், பள்ளி மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை பாதிக்கப்படும் என பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், சென்னைக்கு வெளியே புதிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரை அமைத்து அங்கு தலைமைச் செயலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 hours ago at 19 hours ago