காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக அதிமுக நிர்வாகியும் சமூகச் செயல்பாட்டாளருமான காளியம்மாள் அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காளியம்மாள் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
தற்போதுள்ள 650 ஏக்கர் பரப்பளவை சுமார் 3 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கவும், சரக்கு கையாளும் திறனை ஆண்டுக்கு 21.5 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 100.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் மட்டுமின்றி, தமிழகத்தின் நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் மீன்வளம் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழு சார்பில் காரைக்கால் போலகத்தில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஈஷிதா ரதி அதானி துறைமுக விரிவாக்கம் குறித்து பேசத் தொடங்கியபோது, பொதுமக்களும் மீனவர்களும் அதிருப்தியடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதானி நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் நேரடியாகக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய காளியம்மாள், “எங்களுக்கு அதானி துறைமுக விரிவாக்கம் வேண்டவே வேண்டாம்” என திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அருகில் திறந்தவெளி வசதி இருந்தும், அடுக்குமாடிக் கட்டடத்திற்குள் மக்களை அழைத்துச் சென்று அமர வைத்ததாகவும், அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

முறையான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகள் செய்யப்படவில்லை என்றும், கூட்டத்தில் பேசப்பட்டவை கீழே இருந்த மக்களுக்கு தெளிவாகக் கேட்கவில்லை என்றும், தேவையான மொழிபெயர்ப்பு வசதியும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
2022ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான ஆவணங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அதானி துறைமுக நிர்வாகம் உறுதியளித்ததாகக் கூறிய காளியம்மாள், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
கீழவலூர், மேலவூர், வடக்குவாரூர், திருப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயக் கிராமங்களில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை துறைமுக நிர்வாகத்திடம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் அமர்த்தியுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இயற்கை வளங்கள், கடலோரச் சூழல், மீன்வளம், நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்திற்குப் பாதுகாப்பும் வேண்டும் என்றார்.
துறைமுக விரிவாக்கத்திற்காக கடலில் பல மீட்டர் ஆழத்திற்கு கட்டமைப்புகள் அமைக்கப்படுவதால், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், பாதுகாக்கப்பட வேண்டிய கடல் பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
கப்பல்கள் செல்லும் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டால், அதே பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு இயக்க முடியும் என்றும் அவர் கேட்டார். ஏற்கனவே போதுமான படகு நிறுத்தும் வசதிகள் இல்லாத நிலையில், கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலையின்போது மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மீன்வளம் குறைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகக் கூறிய காளியம்மாள், இதற்கு மீனவர்களையே காரணமாகக் கூற முடியாது என்றார். துறைமுகம் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக நிலக்கரி கழிவுகள் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
பல வளர்ந்த நாடுகள் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியைக் குறைத்து வரும் நிலையில், இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும் விமர்சித்தார்.
தற்போதைய துறைமுக சரக்கு கையாளும் திறனே வேண்டாம் என மக்கள் கூறும் நிலையில், அதனை மேலும் பல மடங்கு அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களைப் படித்து தாங்களே கருத்து தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
துறைமுகத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என ஆவணங்களில் கூறப்பட்டிருந்தால், மக்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள் என்பதற்கும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். தமக்குத் தெரிந்தவரை 16 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளதாகவும் கூறி, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலைப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளின் கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பது அவசியம் என்றும் காளியம்மாள் தெரிவித்தார். துறைமுக விரிவாக்கம் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளையும் படகுகள் செல்லும் வழித்தடங்களையும் பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிய அவர், இதை அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாக அணுக வேண்டும் என்றார்
. “மக்களுக்கு சுதந்திரமான காற்றும் நல்ல சுற்றுச்சூழலும் வேண்டும். அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதாக இருக்கக் கூடாது. நிலம், மண், கடல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்” என்றும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் என்ற பெயரில் மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்தி வைத்து, அவர்களின் கருத்துகளை முழுமையாகப் பதிவு செய்யாமல் நடத்தப்படும் கூட்டத்தை ஏற்க முடியாது என்றும், இது திட்டத்தை நிராகரிப்பதற்காக நடத்தப்படும் நாடகம் போன்றது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் கடலோர மக்களின் சார்பாக அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனக் கூறிய காளியம்மாள், “இந்த விரிவாக்கத் திட்டம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகத் தீவிரமாகப் பேசி வந்த காளியம்மாள், கடந்த மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். தற்போது புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக அதே கார்ப்பரேட் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் அவர் குரல் எழுப்பியுள்ளது
அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இந்த விரிவாக்கத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளதால், காரைக்கால் துறைமுக விவகாரம் சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
