தாராபுரம், மதுராந்தகம் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பலகட்டமாக, தீவிரமாக பில்டர் செய்த பிறகு ஒரு வழியாக அறிவித்து விட்டார். மதுராந்தம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ, கட்சியின் சட்டத்துறை இணை செயலாளரான ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே
எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞரான எஸ். சுகன்யா புதிய முகமாக திமுக சார்பில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் அறிவாலயத்தில் ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கையில் ஆட்சியை வைத்துக் கொண்டே திமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணம் என்னவென்று பார்த்ததில் அதில் ஒரு மிக முக்கியமான காரணம், கடந்த 5 வருஷத்தில் முக்கிய அமைச்சர்கள் மட்டும்தான் சிறப்பாக வாழ்ந்தார்கள். காசு, பணம் என கொழித்தார்கள்.

ஆனால் இந்த பாவப்பட்ட உடன்பிறப்புகளும், தொண்டர்களும் ஒரு கப்பு டீ குடிக்கக் கூட காசு பார்க்க முடியாமல் நடுத்தெருவில் நின்றார்கள். அந்த வெறியில்தான் சொந்த திமுகவினர் குடும்பமே ”அப்படா சாமி இவங்களுக்கு ஒரு கும்பிட போட்டுருவோம்” என கடுப்பாகி இந்த கொடுக்கறோம் பாரு மாற்றத்தை என விஜய்க்கு தங்களோட பொன்னான ஓட்டை தூக்கி போட்டு ஜெயிக்க வைத்தார்கள். இப்போது ஆளுங்கட்சியாக விஜய் கெத்தா உட்கார்ந்திருக்கிறபோது நடக்கிற இந்த இடைத்தேர்தலில் இப்போது இருவர் களம்பிறக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள்தான் வேட்பாளர் என கை காட்டுவதற்க்கு முன் நடந்த கதையே வேறு.
இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் 2026ல் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். தாராபுரத்தில் திமுக இரண்டாவது இடத்திலும், மதுராந்தகத்தில் திமுக மூன்றாவது இடத்திலும் இருந்தது. அதனால் திமுக மூத்த நிர்வாகிகள் எல்லாம் ”தலைவரே ஏற்கனவே தாராபுரத்தில் அதிமுக ஜெயிக்க, நாம இரண்டாவது இடத்தில இருந்தோம். மதுராந்தகத்தில இன்னும் மோசமா மூணாவது இடத்துக்கு போய் அசிங்கப்பட்டோம். இதுல பத்தாததற்கு அதிமுக எம்எல்ஏக்கள விஜய் கட்சி ஆள் வச்சு தூக்கி ராஜிராபமா பண்ண வச்சிருக்கு.
இப்ப இருக்கற நிலைமையில காத்து எங்க அடிக்குதுன்னு நமக்கு நல்லாவே தெரியும். இந்த நிலைமையில நாம போய் நின்னு மறுபடியும் பல்பு வாங்கி இருக்கிற மானத்தையும் காத்துல பறக்க விடணுமா? பேசாம அந்த மதசார்பின்மையை காப்பாற்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என ஏதாவது அது இதுன்னு சொல்லி வழக்கம் போல ஒரு தத்துவத்து பேட்டியை கொடுத்துட்டு ஒதுங்கிடலாம்” என சில சீனியர்கள் எல்லாம் ஸ்டாலினின் காதில் போட்டிருக்கிறார்கள்.

இதை கேள்விப்பட்ட சின்னவர் உதயநிதி ஸ்டாலின், ”ஒரு மூத்த நிர்வாகிகள் மாதிரி பேசுறீங்களா? உங்களை எல்லாம் வச்சு கட்சியை எப்படி அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறதுன்னே தெரியல. நாங்க சொல்றத மட்டும் கேளுங்க மத்தத நான் பாத்துக்கிறேன்” எனச் சொல்லி இதைப்பற்றி ஸ்டாலினிடம் ரொம்ப ஓப்பனாவே போய் பேசி இருக்கறார். ”அப்பா நாம இந்த தேர்தலை புறக்கணிச்சோம்னா விஜய் பேசுற அவதூறுகளுக்கு எல்லாத்துக்கும் நாம பயந்து ஓடிட்டோம்னு அவங்களே நமக்கு போஸ்ட் அடிச்சு ஒட்டிடுவாங்க. அவரே களத்துல சோலோவா நின்னு டான்ஸ் ஆடுறதுக்கு நம்மளே மேடை போட்டு கொடுத்த மாதிரி ஆயிடும்.
அதனால கண்டிப்பா நம்ம போட்டி போடுறோம். இது நம்ம வெற்றி, தோல்விங்கறத விட, நமக்கு தன்மான பிரச்சனை. அதுக்காகவாவது இதிலிருந்து நாம ஒரு ஸ்டெப் கூட பின்வாங்க கூடாது. வேட்பாளர்கள் யாரு அப்படிங்கிற பொறுப்பை என்கிட்ட விட்டுருங்க. எப்படி வெற்றி பெறணும்னு நான் பாத்துக்கிறேன்” என மாசா கேரண்டி கொடுத்துதான் அதற்கான வேட்பாளர்கள் யார் என பில்டர் செய்து உடனே திமுக வேட்பாளர்களை அறிவிக்க வைத்திருக்கிறார்.
போட்டியிட்டு தோற்றாலும் பரவாயில்லைம், பயந்து ஓடக்கூடாது என்பதில் உதயநிதியோட லாஜிக்னாலதான் இன்னைக்கு பரந்தாமனும், சுகன்யாவும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.
