தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் மீது முதலமைச்சர் விஜய் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவர் மீது திமுக சார்பில் அவை உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக துணைக் கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனது உரையின்போது சர்க்காரியா கமிஷன் மற்றும் வீராணம் திட்டம் குறித்து பேசியது பேரவை விதிகளுக்கு எதிரானது என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவையில் இல்லாத மறைந்த தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் குறித்து முதலமைச்சர் பேசியதும் விதிகளுக்குப் புறம்பானது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் குறிப்பிட்டுப் பேசியதற்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டு, முந்தைய திமுக ஆட்சியில் “அறிவியல் பூர்வ ஊழல்” நடைபெற்றதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டும் விமர்சித்ததால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையை வெறும் தாளில் இருந்து வாசிக்காமல், கைகளில் அமலாக்கத்துறை ஆவணங்களை ஏந்தியபடி ஆவேசமாகப் பேசினார். மொத்தம் 65 நிமிடங்கள் நீடித்த அவரது உரையில், சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே சட்டம்-ஒழுங்கு தொடர்பான அரசு தயாரித்த அறிக்கை குறித்து பேசப்பட்டதாகவும், மீதமுள்ள 45 நிமிடங்களும் திமுக மீதான நேரடி அரசியல் தாக்குதலாகவும் அதிரடி ‘பஞ்ச் டயலாக்’களாகவும் இருந்ததாக திமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உரையை திமுக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் கேட்ட 15 கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், பழைய சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் பேசுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேச வராமல் வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்ய மட்டுமே சட்டப்பேரவைக்கு வந்து பேசிவிட்டுச் சென்றதாகவும் உதயநிதி கிண்டலடித்துள்ளார்.
நேற்றைய மோதலைத் தொடர்ந்து, இன்று சட்டப்பேரவை கூடியதும் திமுக கொறடா எ.வ. வேலு, முதலமைச்சர் விஜய்யின் நேற்றைய பேச்சுகளை, குறிப்பாக அமலாக்கத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை, அவைக் குறிப்பில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
ஆனால், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் அவைக் காவலர்கள், திமுக உறுப்பினர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கி அவையிலிருந்து வெளியேற்றினர்.
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ. வேலு, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண் 92-ஐ நேரடியாக மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் அல்லது தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கை ஆதாரமாகக் கொண்டு சட்டப்பேரவையில் பேசக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமலாக்கத்துறை ஆவணங்களை அவையில் வாசித்தது சட்டப்படி தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணத்தை, குறிப்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த அப்பிடவிட்டை, முழுமையாக அவையில் படித்ததாகவும் எ.வ. வேலு குற்றம் சாட்டினார்.
மானியக் கோரிக்கை தொடர்பாகப் பேசும்போது சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கொலைகள் குறித்து பதிலளிக்காமல் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியதாகவும் எ.வ. வேலு விமர்சித்தார். முதலமைச்சர் ஏறத்தாழ 27 நிமிடங்கள் பேசியதாகவும், அந்த நேரம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்து அவரது பேச்சைக் கேட்டதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, நெருக்கடி நிலை காலத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறைக்குச் சென்று பட்ட துயரங்களை முதலமைச்சர் விஜய் தனது உடல் அசைவுகள் மற்றும் சைகைகள் மூலம் அவையில் கேலி செய்து கொச்சைப்படுத்தியதாக திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மிசா சட்டத்தின் கீழ் ஏராளமான திமுகவினர் சிறைக்குச் சென்றதாகவும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மிசா கொடுமைக்கு ஆளாகி சிறையில் இருந்ததாகவும் திமுக தெரிவித்துள்ளது. அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் ‘திரைப்பட பாணி’ நடிப்பு இருந்ததாக மூத்த திமுக தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மிசா குறித்து பேசும்போது, தான் ஒரு திரைப்பட நடிகர் என்பதற்கேற்ற வகையில் முதலமைச்சர் விஜய் உடல்மொழியைப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலம் மிசா போராட்டத்தில் திமுக தலைவர்கள் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தியதாகவும் எ.வ. வேலு குற்றம் சாட்டினார்.
மிசா என்பது ஜனநாயகத்துக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட நடவடிக்கை என்றும், தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்டோர் சிறைக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். மிசா, சர்க்காரியா கமிஷன் மற்றும் முரசொலி மாறன் தொடர்பான கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக கோரியதாகவும், ஆனால் அவை நீக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஏற்கெனவே பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளதாகவும், சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பேசியுள்ளதாகவும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனில் மொத்தம் 28 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அவை எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் மற்றும் முகாந்திரம் இல்லாததால் வழக்குத் தொடர முடியாது என கமிஷன் முடித்துவைத்ததாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விவகாரத்தில் ஏதோ தவறு நடைபெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
சர்க்காரியா கமிஷன் குறித்து பேசும்போது முரசொலி மாறனின் பெயரும் குறிப்பிடப்பட்டதாகவும், தற்போது அவையில் இல்லாத நபர்கள், குறிப்பாக மறைந்தவர்களின் பெயர்களை சட்டப்பேரவையில் குறிப்பிடுவது தொடர்பாக விதிகள் உள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது.
முரசொலி மாறன் மறைந்துவிட்ட நிலையில், அவரைப் பற்றி முதலமைச்சர் விஜய் பேசியது அவை மரபுக்கும் விதிகளுக்கும் எதிரானது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், முரசொலி மாறன் குடும்பத்தினருடன் முதலமைச்சர் விஜய்க்கு முன்பு நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும், அவர்களது குடும்பத்துடன் இணைந்து விஜய் திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய உரையின்போது முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் நடைபெற்ற திட்டங்களில், ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டாயமாக “கட்சி நிதி” வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.
இந்தத் தொகைகள் நேரடியாக மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினைச் சென்றடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளே திமுக தரப்பில் இன்றைய மிகப்பெரிய எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாகவே, முதலமைச்சர் விஜய் பேரவை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, திமுக துணைக் கொறடா கோவி. செழியன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அவை உரிமை மீறல் புகார் மனுவை அளித்துள்ளார்.
