கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, தான் படித்த ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிட்ட வீடியோ செய்தியில், தனது கல்லூரிக் கால மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஐஐடி காரக்பூரில் கழித்த காலம் தனது வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்ததாகவும், அந்த வளாகம் தனது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது மனைவி அஞ்சலியை முதன்முதலில் சந்தித்தது ஐஐடி காரக்பூர் வளாகத்தில்தான் என்பதை சுந்தர் பிச்சை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். முதலாம் ஆண்டு படிக்கும் போதே அஞ்சலியைச் சந்தித்ததாகவும், கல்லூரி வளாகத்துடன் தங்களது வாழ்க்கையின் பல முக்கியமான நினைவுகள் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்லூரி விடுதி வாழ்க்கை, நண்பர்களுடன் பி308 அறையில் நள்ளிரவு வரை படித்தது, ஹாரிஸ் உணவகத்தில் சாப்பிட்டது, இல்லு திருவிழா கொண்டாட்டங்கள் என ஏராளமான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அப்போது தான் முதன்முறையாக கணினியைப் பயன்படுத்தியதாகவும், கையில் பிளாப்பி டிஸ்க்குகளை எடுத்துக்கொண்டு வளாகம் முழுவதும் சுற்றியதாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலத்தில் தான் முதன்முதலில் கணினி புரோகிராமிங் கற்றுக்கொண்டதாகவும், அப்போது கிடைத்த தொழில்நுட்ப அனுபவங்களே பின்னாளில் தனது தொழில் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உலகுடன் ஒப்பிடும்போது, அப்போது இருந்த தொழில்நுட்ப வசதிகள் மிகவும் குறைவாக இருந்தாலும், அந்த அனுபவங்கள் மறக்க முடியாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்லூரியில் படித்த காலத்திலேயே அஞ்சலியுடன் தனது காதல் மலர்ந்ததாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் மொபைல் போன், வாட்ஸ்அப் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், அஞ்சலியைச் சந்திக்க பெண்கள் விடுதிக்குச் சென்று, அங்கிருந்த காவலாளியிடம் தகவல் தெரிவித்து அவரை அழைக்கச் சொல்வாராம். அப்போது காவலாளி விடுதிக்குள் சத்தமாக, “அஞ்சலி, உங்களைப் பார்க்க சுந்தர் வந்திருக்கிறார்” என்று கூறுவார் என்றும், இதைக் கேட்டு அங்கிருந்த மாணவிகள் தன்னைக் கிண்டல் செய்வார்கள் என்றும் சுந்தர் பிச்சை நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான உதவித்தொகை கிடைத்தது. அதே நேரத்தில் அஞ்சலி இந்தியாவிலேயே தங்கியிருந்தார். அப்போது சர்வதேச தொலைபேசி அழைப்புகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், போன் பேசுவதற்குப் போதிய பணம் இல்லாமல் இருவரும் தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்த காலமும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத் தூரமும் அவர்களது காதலை மாற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக அளித்திருந்த ஒரு நேர்காணலில், கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததைவிட அஞ்சலியிடம் தனது காதலைத் தெரிவித்ததுதான் மிகவும் கடினமான காரியம் என்று சுந்தர் பிச்சை நகைச்சுவையாகக் கூறியிருந்தார். கல்லூரியின் இறுதி ஆண்டில்தான் அஞ்சலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சுந்தர் பிச்சையின் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் அஞ்சலிக்கும் முக்கியப் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மைக்ரோசாஃப்ட் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் அவருக்கு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் கூகுளை விட்டு வெளியேற அவர் யோசித்தபோது, அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்றும் கூகுளிலேயே தொடருமாறும் அஞ்சலி அறிவுறுத்தியதாகவும் சுந்தர் பிச்சை முன்பு தெரிவித்துள்ளார்.
அஞ்சலியின் அறிவுரையை ஏற்று கூகுளிலேயே தொடர்ந்து பணியாற்றிய சுந்தர் பிச்சை, பின்னர் அதே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார். தனது வாழ்க்கைப் பயணத்தில் அஞ்சலியின் ஆதரவு முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐஐடி காரக்பூரின் 75-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிட்ட வீடியோவில், தனது கல்லூரி வாழ்க்கை மற்றும் அஞ்சலியுடனான நினைவுகளை மட்டுமின்றி, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் சுந்தர் பிச்சை பேசியுள்ளார். இந்திய மாணவர்கள் தற்போது உலகம் வியக்கும் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் மட்டுமே நிலைத்து நிற்காமல், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களது பணிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.
அண்மையில் டெல்லியில் இந்திய மாணவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் காணப்பட்ட தொழில்நுட்ப ஆர்வமும், தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற அவர்களின் துடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஒரு சிறந்த கல்வி நிறுவனம், ஒரு மாணவரின் கனவுகளுக்கு எவ்வாறு சிறகுகளை வழங்குகிறது என்பதற்கு ஐஐடி காரக்பூரில் தனது பயணம் சிறந்த எடுத்துக்காட்டு என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். சாதாரண மாணவராக ஐஐடி காரக்பூரில் தொடங்கிய தனது பயணம், இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமைப் பொறுப்பை அடையும் அளவுக்கு உயர்ந்ததற்கு அந்தக் கல்வி நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய தலைமுறை இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையையும் சுந்தர் பிச்சை தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
