Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த மாணவி அனிதாவின் நினைவு நாளில், அவரைப் பற்றிய எந்தவொரு சமூக வலைதளப் பதிவையும் வெளியிடாததும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா உயிரிழந்தபோது அவரது இல்லத்திற்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இன்றைய முதலமைச்சர் விஜய், தற்போது அனிதாவின் நினைவு நாளில் குறைந்தபட்சம் ஒரு சமூக வலைதளப் பதிவுகூட வெளியிடவில்லை என்று மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனிதாவைத் தனது சொந்தத் தங்கையாகக் கருதுவதாக முன்பு விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அவரது தலைமையிலான அரசு அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளதாக, அனிதாவின் சகோதரர் மணிரத்னம் குற்றம் சாட்டியுள்ளார்.

அனிதாவின் நினைவு நாளில் முதல்வர் விஜய் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அஞ்சலியோ, சமூக வலைதளப் பதிவோ வெளியாகாதது பல்வேறு மாணவர் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

நீட் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை, காவல்துறை மூலம் தமிழக அரசு ஒடுக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படியுங்க  உடைந்தது திமுக கூட்டணி..! தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்..! நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர்கள் நடத்தவிருந்த அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு ஏன் அனுமதி மறுத்தது என்று சட்டப்பேரவையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தன்னைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது வருத்தமளிப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி காவல்துறை தரப்பில் பதில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு எதிரானது என்றும், தமிழகத்தில் உள்ள விஜய் தலைமையிலான மாநில அரசுக்கு எதிரானது அல்ல என்றும் மாணவர் அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாணவர் அமைப்பினர் கூறுகையில், “இந்த அரசின் கோரிக்கைதான் எங்களுடைய கோரிக்கையும். அந்தக் கோரிக்கைக்காகத்தான் நாங்கள் நினைவேந்தல் நடத்துகிறோம். இது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படும் போராட்டம் அல்ல” என்று தெரிவித்தனர்.

மேலும், “அனிதா உயிரிழந்தபோது, இன்றைய முதலமைச்சர் விஜய் அவரது வீட்டிற்குச் சென்று, குடும்பத்தினருடன் அமர்ந்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அனிதாவைத் தனது சொந்தத் தங்கை என்று குறிப்பிட்டார். அந்தப் பெண்ணை முதன்முதலில் எங்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் பொதுவெளிக்கு அழைத்து வந்து, அவரது சகோதரர் மணிரத்னத்துடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினோம். இந்த வரலாறு முதலமைச்சருக்கும் நன்றாகத் தெரியும்” என்றும் கூறினர்.

இதையும் படியுங்க  "ஒன்றரை வருட காதல் தோல்வி… மீட்டு எடுத்த யுவன் பாடல்கள்!" - ஜேசன் சஞ்சய் அவிழ்த்த சுவாரசிய ரகசியங்கள்!
Republic Tamil

தொடர்ந்து அவர்கள், “அனிதாவின் நினைவு நாளில் குறைந்தபட்சம் ஒரு நினைவேந்தல் பதிவையாவது முதலமைச்சரால் வெளியிட முடியாதா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், “சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா அவர்கள், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அப்படியானால், இதை வைத்து அரசியல் செய்வது யார்? முன்பு நடிகராக இருந்த விஜயா, தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜயா என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது. உண்மையில் அரசியல் செய்வது அவர்கள்தான் என்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது” என்றும் மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

“அரசுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு ஒரு நிலைப்பாடு என்ற நிலை இருக்கிறது. அரசுக்கு முன், அரசுக்கு பின் என விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கிறோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், அனிதாவின் சகோதரர் மணிரத்னம் மற்றும் நீட் எதிர்ப்புக் கூட்டியக்க நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடி, அனிதா உள்ளிட்ட நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்த மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தற்போது அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், விஜய்க்கும் அனிதா குடும்பத்துக்கும் இடையேயான 2017-ஆம் ஆண்டின் நெகிழ்ச்சியான சந்திப்பும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படியுங்க  தாகத்தில் பெண் மீது மோகம்..! முதல் வழக்கில் சிக்கிய இளைஞர்..! அலேக்காக தூக்கிய சிங்கப்பெண் சிறப்புப்படை..!

கடந்த 2017-ஆம் ஆண்டு அனிதா உயிரிழந்தபோது, நடிகர் விஜய் எந்தவித ஊடக வெளிச்சமோ, விளம்பரமோ இல்லாமல் அரியலூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நள்ளிரவில் நேரில் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு அனிதாவின் தந்தை சண்முகத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்து விஜய் ஆறுதல் கூறினார். அப்போது, அனிதாவின் தந்தை விஜயைக் கட்டிப்பிடித்து அழுத புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றன.

அந்தச் சந்திப்பின்போது அனிதாவைத் தனது “சொந்தத் தங்கை” என்று விஜய் குறிப்பிட்டதாக, அனிதாவின் குடும்பத்தினர் பல்வேறு பேட்டிகளில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அன்று அனிதாவைத் தனது தங்கை என்று குறிப்பிட்ட விஜய், இன்று முதலமைச்சராக இருக்கும் நிலையில், அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? நினைவு நாளில் ஒரு சமூக வலைதளப் பதிவுகூட வெளியிடாதது ஏன்? என்பதே மாணவர் அமைப்புகளின் பிரதானக் கேள்வியாக உள்ளது.

இதற்கிடையே, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “அனிதாவை மறந்தாரா CM விஜய்?” என்ற ஹேஷ்டேக்குகளும், மறுபுறம் “நீட் வழக்குகளை ரத்து செய்த தவெக அரசு” என்ற ஆதரவுப் பதிவுகளும் பரஸ்பரம் மோதிக்கொண்டன.

முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து ஒரு வரிப் பதிவு கூட வெளியாகாததை, நெட்டிசன்கள் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக்கி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago