Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையின் கரன்சி செஸ்ட்டில், ரூ.7.40 கோடி மதிப்பிலான அசல் ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக கள்ளநோட்டுகள் வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சஹாரன்பூர் கண்டாகர் கிளையிலிருந்து ஜெய்ப்பூரில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கரன்சி செஸ்ட்டுக்கு ரூ.11.50 கோடி பணம் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி அனுப்பப்பட்ட இந்தப் பணத்தை அங்கு சரிபார்த்தபோது, முதற்கட்டமாக ரூ.4.36 லட்சம் பற்றாக்குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவின்பேரில் சஹாரன்பூர் கிளையில் விரிவான தணிக்கை நடத்தப்பட்டது.

அப்போது, வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திற்குள் அசல் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.7.40 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற தணிக்கையில், கள்ளநோட்டுகளின் மதிப்பு ரூ.17 கோடி வரை இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

தணிக்கை அதிகாரிகள் தொடர்ந்து பணத்தை எண்ணி சரிபார்த்து வரும் நிலையில், வங்கியின் பெட்டகத்தில் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் அடங்கிய 148 கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிலும் தலா 1,000 நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "மகள் படிக்க புத்தகங்கள் வாங்க… வெறும் காலில் மாரத்தான் ஓடி முதல் பரிசு வென்ற 47 வயது சமையல் காரத் தாய்!

இந்த நோட்டுகள் அனைத்தும் மிகவும் குறைந்த தரம் கொண்ட, எளிதில் அடையாளம் காணக்கூடிய கள்ளநோட்டுகள் என்று சஹாரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் சிங் தெரிவித்துள்ளார். இவை உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட கள்ளநோட்டுகள் அல்ல என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சிசிடிவி ஆய்வில், வங்கியின் பகுதிநேர துப்புரவுப் பணியாளரான விஷால் குமார், கரன்சி செஸ்ட்டில் இருந்த பணக் கட்டுகளில் இருந்து நோட்டுகளை திருடும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், வங்கியின் மிகவும் பாதுகாப்பான ஸ்ட்ராங் ரூம் மற்றும் கரன்சி செஸ்ட் பகுதிக்குள் ஒரு துப்புரவுப் பணியாளரால் எவ்வாறு நுழைய முடிந்தது என்ற கேள்வி தற்போது போலீஸாரிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது. உயர் அதிகாரிகளின் அனுமதி அல்லது அவர்களின் அலட்சியம் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையிலான அசல் ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துச் சென்று, அதற்குப் பதிலாக கள்ளநோட்டுகளை வைப்பது சாத்தியமில்லை என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படியுங்க  நீட் வினாத்தாள் லீக் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிஐ அதிரடி

இந்த விவகாரம் தொடர்பாக வங்கியின் மூத்த மண்டல மேலாளர் ரவி குமார், கரன்சி செஸ்ட் மேலாளர்கள் சுஷில் சர்மா மற்றும் அமித் குமார் ஆகிய 3 அதிகாரிகள் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கள்ளநோட்டு மற்றும் நிதி மோசடி தொடர்பான பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் பின்னணியில் வங்கிக்குள் செயல்பட்டிருக்கக்கூடிய பெரிய நெட்வொர்க் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையான ரூபாய் நோட்டுகள் எப்போது பெட்டகத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டன, அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன, அதற்குப் பதிலாக கள்ளநோட்டுகள் எப்போது வைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரன்சி செஸ்ட்டுக்குள் யார் யார், எந்த நேரத்தில் நுழைந்தனர் என்பதைக் காட்டும் அக்சஸ் லாக் பதிவுகள், வங்கிப் பரிவர்த்தனைப் பதிவுகள், கணக்குப் புத்தகங்கள் மற்றும் கடந்த சில மாதங்களின் தணிக்கை ஆவணங்கள் ஆகியவற்றையும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஆகஸ்ட் 16-க்குள் இதை செய்யாவிட்டால் விலை ₹2000? உடனே மாத்துங்க!"

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளிடமும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடமும் SIT அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரன்சி செஸ்ட்டில் உள்ள ஒவ்வொரு ரூபாய் நோட்டுக் கட்டுகளும் இயந்திரங்கள் மூலமாகவும், அதிகாரிகள் மூலமாகவும் எண்ணி சரிபார்க்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திற்குள்ளேயே கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அந்த கள்ளநோட்டுகள் பொதுமக்கள் புழக்கத்திற்கு வரவில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் வழக்கமான தணிக்கைகளின்போது கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, இவ்வளவு பெரிய தொகையிலான கள்ளநோட்டுகள் எவ்வாறு கரன்சி செஸ்ட்டிற்குள் வைக்கப்பட்டன என்பது தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

வங்கிக் கொள்ளையர்கள் வெளியிலிருந்து வந்து லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, வங்கியின் உள்ளேயே அசல் ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக கள்ளநோட்டுகளை வைத்ததாக கூறப்படும் இந்தச் சம்பவம், இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago