717 டாஸ்மார்க் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட பலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விடுமுறை கால அமர்வில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தமிழக அரசு சமீபத்தில் 717 அரசு டாஸ்மார்க் மதுபான கடைகளை மூடும் முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த 717 கடைகளில் பலர் அரசிடம் முறையாக அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் மது அருந்த வருபவர்களுக்கு சிற்றுண்டி விற்பனை செய்யும் உரிமையை பெற்றுள்ளதாகவும், அதேபோல் காலி மதுபான பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு திடீரென கடைகளை மூடும் உத்தரவு பிறப்பித்ததால், ஒப்பந்த காலம் இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். மேலும், ஒப்பந்த காலத்திற்கான முழுத் தொகையையும் ஏற்கனவே அரசுக்கு செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
எனவே, 717 கடைகளை மூடும் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மீதமுள்ள குத்தகைக் காலத்திற்கான தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல மனுதாரர்களுக்கு இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை ஒப்பந்த காலம் இருப்பதாகவும், அதற்கான முழுத் தொகையும் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதனால் மனுதாரர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், மனுதாரர்கள் ஏற்கனவே ஒப்பந்தத் தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளதால், 717 டாஸ்மார்க் கடைகளுக்கான சிற்றுண்டி விற்பனை உள்ளிட்ட ஒப்பந்தங்களுக்கான மீதித் தொகையை திருப்பிச் செலுத்துவது குறித்து அரசு இரண்டு வாரங்களுக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
