சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கொங்கணாபுரம் அடுத்த பாச்சாலியூர் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண், எடப்பாடி அருகே உள்ள கோணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத நிலையில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலா, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அதற்குள் பெண்ணின் சடலம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கமும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதனிடையே, கோகிலா திருமணம் ஆகாமல் கர்ப்பமடைந்தது தொடர்பாக, கன்னியாம்பட்டியைச் சேர்ந்த அம்மாசி என்ற இளைஞர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, போலீசார் அம்மாசியை வரவழைத்து விசாரணை நடத்தி, கோகிலாவை அவருடன் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அம்மாசியுடன் சென்ற சில நாட்களிலேயே, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோகிலாவைக் காணவில்லை என அவரது தந்தையிடம் அம்மாசி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கோகிலாவின் தந்தை, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் கோகிலாவைத் தேடி வந்த நிலையில், தற்போது அவர் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போலீசார் தலையிட்டு கோகிலாவை அம்மாசியுடன் அனுப்பி வைத்த சில நாட்களிலேயே அவர் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளதால், அம்மாசி மற்றும் அவரது தரப்பினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அம்மாசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாமல் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாவுக்கும் அம்மாசிக்கும் இடையே ஏற்பட்ட உறவு மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பத்தை மறைப்பதற்காகவோ அல்லது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவோ கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.
மேலும், கோகிலா எப்போது, எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவரது உடல் எப்போது கிணற்றில் வீசப்பட்டது உள்ளிட்ட விவரங்களை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து மேலும் தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மற்றும் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோகிலாவின் மரணம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
