Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தலைமை தபால் நிலையத்தின் கீழ் செயல்படும் வெள்ளக்கோவில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த தபால்காரர் செந்தில்குமார், கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் ஏழு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடுமையான அலட்சியத்தைத் தொடர்ந்து, செந்தில்குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் உத்தரவிட்டுள்ளார்.

செந்தில்குமார், வெள்ளக்கோவில் பகுதி மக்களுக்கு வந்த ஆதார் அட்டைகள், பான் அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், வங்கி பாஸ்புக்குகள், ஏடிஎம் (ATM) கார்டுகள், நீதிமன்ற உத்தரவுகள், மாணவர்களின் நீட் (NEET) தேர்வு தொடர்பான தபால்கள், கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை உரியவர்களிடம் வழங்காமல், தனது வீட்டின் பின்புற அறையில் ஏழு மூட்டைகளில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது வீட்டின் பின்புறத்தில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தபால்கள் சிதறிக் கிடந்ததுடன், ஆதார் அட்டைகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "காலை நேரத்தில் அரங்கேறிய விபரீதம்… இரட்டைக் கொலையால் பதற்றத்தில் உறைந்த ஏர்வாடி மக்கள்!"

திருப்பூர் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழு மூட்டை தபால்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், இந்த தபால்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதற்காகவும், வீட்டிற்குள் யாரும் நுழையாமல் இருக்கவும் செந்தில்குமார் ஐந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் அவரது வீட்டில் இருந்த நாய் ஒருவரைக் கடித்த சம்பவம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, இந்த முறைகேடு தற்செயலாக அம்பலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறிமுதல் செய்யப்பட்ட ஏழு மூட்டைகளில் இருந்த தபால்களை, தபால் துறை ஊழியர்கள் மூலம் உரிய பயனாளிகளிடம் உடனடியாக ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வளவு பெரிய முறைகேடு தபால் துறையின் கண்காணிப்பில் எப்படி வெளிச்சத்திற்கு வராமல் போனது என்பது குறித்தும் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "மனமகிழ் மன்றமா? பணத்தை விழுங்கும் மாயவலையா? – திருப்பூரை உலுக்கும் கோடீஸ்வர சூதாட்ட மாஃபியா!"

வேலைவாய்ப்பு, கல்வி, வங்கி சேவைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை நான்கு ஆண்டுகளாக முடக்கிய தபால்காரர் மீது வெறும் பணியிடை நீக்கம் மட்டுமின்றி, நிரந்தர பணிநீக்கம் மற்றும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago