விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களையும், திட்டமிட்ட வதந்திகளையும் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் தம்மை குறிவைத்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், தம்மை திமுக ஆதரவாளர் எனக் கூறி அவதூறு பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நேர்மை மற்றும் தூய்மை முக்கியம் என்பதற்காகவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்ததாகவும், அந்த கூட்டணியை உடைக்காமல் பாதுகாக்க வேண்டியது தனது பொறுப்பு எனக் கருதியதாகவும் அவர் கூறினார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அவர், அன்றைய காலகட்டத்தில் பல்வேறு கூட்டணிகளில் இணைய அழைப்புகள் வந்ததாகவும், அவற்றை அனைத்தையும் நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட நலனுக்காக அல்லது கட்சியின் நலனுக்காக கூட்டணியை உடைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் உறுதியாக கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாறு மற்றும் தனது அரசியல் பயணத்தை எடுத்துரைத்த அவர், 37 ஆண்டுகளாக மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், பதவி மற்றும் வாய்ப்புகளை பலமுறை தவிர்த்ததாகவும் தெரிவித்தார். கூட்டணி நலனுக்காக தேர்தலில் போட்டியிடுவதையும், பதவி வாய்ப்புகளையும் பலமுறை விட்டு வந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், கட்சிக்குள் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி ஆதரவு முடிவுகள் அனைத்தும் ஆலோசனைக்குப் பிறகே எடுக்கப்பட்டவை எனவும் அவர் விளக்கமளித்தார். கட்சியில் எந்த முடிவும் தனிப்பட்ட ஆசை அல்லது பேரம் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாகவும், தமக்கு அமைச்சர் பதவி வழங்கும் வாய்ப்பு வந்தபோதும், தனிப்பட்ட விருப்பத்தை விட கட்சியின் நிலைப்பாடு முக்கியம் எனக் கருதி அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.
தனக்கு பதவி ஆசை இல்லை என்றும், எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனது அரசியல் முடிவுகள் அனைத்தும் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், இயக்க நலனும் மக்களின் நலனும் கருதி எடுக்கப்பட்டவை எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
கட்சியில் பல்வேறு முன்னணி தோழர்கள் தமக்கு ஆதரவாக இருந்ததாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை உரையாடலின் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் மற்றும் அவதூறுகளை தோழர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவற்றுக்கு பதிலளிக்க தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொள்ளாமல், அவற்றை கடந்து செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் சலசலப்புகளால் ஒருபோதும் பலவீனமடையாது என்றும், தமிழகத்தில் ஒரு தனிப்பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக, தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
