உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் ஹஸ்தினாபூர் பகுதியில், ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகவும், கள்ளக்காதலனுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும், மழலையர் பள்ளி உரிமையாளரான 35 வயது அதுல் பன்வாரை, அவரது மனைவி தாமினி பன்வார் மற்றும் கள்ளக்காதலன் துஷார் ஆகியோர் இணைந்து விஷப்பாம்பைக் கடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தாமினி, அவரது கள்ளக்காதலன் துஷார் மற்றும் பாம்பைப் பிடிக்க உதவிய சோனு, உதய் குமார் ஆகியோர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் உள்ள ‘கிருஷ்ணா கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல்’ என்ற மழலையர் பள்ளியை அதுல் பன்வார் மற்றும் அவரது மனைவி தாமினி இணைந்து நடத்தி வந்தனர். இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். அதே பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய துஷாருடன் தாமினிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் இணைந்து அதுலைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த ஆறு மாதங்களாகவே இந்தக் கொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதுலின் பெயரில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதும், பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்வதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
முதலில், துஷார் கார் ஏற்றி அதுலைக் கொலை செய்ய முயன்றதாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விஷமுள்ள கட்டுவிரியன் (Krait) பாம்பை பயன்படுத்தி கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக துஷார், பாம்பாட்டிகளான சோனு மற்றும் உதய் குமாரிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்து விஷப்பாம்பை வாங்கியுள்ளார்.

சம்பவத்துக்கு முன்பு, பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக மாற வேண்டும் என்பதற்காக, அந்த கட்டுவிரியன் பாம்பை மூன்று நாட்கள் பட்டினியாக வைத்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை நடைபெறுவதற்கு முன்பே துஷார், அந்தப் பாம்பை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்திருந்தார். பின்னர் போலீஸார் அவரது மொபைலை சோதனை செய்தபோது அந்த புகைப்படம் கைப்பற்றப்பட்டு, வழக்கின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
சம்பவத்தன்று இரவு, தாமினி தனது கணவருக்கு சுமார் 10 தூக்க மாத்திரைகள் கலந்த பாலைக் கொடுத்து மயக்கமடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தனது மகனை அழைத்துக் கொண்டு வேறு அறையில் படுத்துக் கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து, துஷார் மற்றும் அவரது கூட்டாளிகள் கொண்டு வந்த விஷப்பாம்பை அதுல் போர்த்திக் கொண்டு தூங்கியிருந்த போர்வைக்குள் விட்டுள்ளனர். மயக்க நிலையில் இருந்த அதுலை பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு, கணவர் தற்செயலாக பாம்பு கடித்து உயிரிழந்ததாக மருத்துவமனையிலும், உறவினர்களிடமும் தாமினி கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், அதுலின் தந்தை அஜப் சிங் தனது மருமகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து, மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீஸார் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மொபைல் போன் அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது தாமினி மற்றும் துஷார் அடிக்கடி தொடர்பில் இருந்தது உறுதியானதுடன், கொலைக்கு 20 நாட்களுக்கு முன்பே கார் மூலம் அதுலைக் கொல்ல முயற்சி செய்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைத்தவுடன், அதில் ரூ.5 லட்சத்தை பாம்பைப் பிடிக்க உதவிய சோனு மற்றும் உதய் குமாருக்கு வழங்குவதாக பேரம் பேசப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்கு மறுநாள் காலை அதுல் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்தபோது, அங்கிருந்தவர்கள் படுக்கையில் இருந்த விஷப்பாம்பை அடித்துக் கொன்றனர். இதை சாதாரண பாம்புக்கடி மரணம் என நம்ப வைக்க தாமினி முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால், அதுலின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணை, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் மொபைல் போன் சோதனைகள் மூலம் முழு சதித் திட்டமும் அம்பலமானது. இதையடுத்து, தாமினி, அவரது கள்ளக்காதலன் துஷார் மற்றும் சதிக்கு துணைநின்ற சோனு, உதய் குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
