https://republictn.com/

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 23வது பிரம்மாண்ட ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார்.

உதகை அரசு ரோஜா பூங்காவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்களைக் கொண்டு, “பறவைகளின் சொர்க்கம்” என்ற கருப்பொருளில் இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.

இந்த ஆண்டும், சுமார் 70 வகையான ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு பறவைகளின் வடிவங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. கழுகு, இருவாச்சி, புல்புல், பாரடைஸ் பிளை கேட்சர், தூக்கணாங்குருவி, தேன்சிட்டு, மலபார் இருவாச்சி உள்ளிட்ட 14 வகையான பறவைகளின் வடிவங்கள் வண்ணமயமான ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அலங்காரங்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பலர் இந்த கண்காட்சி மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் அமைந்துள்ளதாகவும், புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளுக்காக கார்டூன் பறவைகள் உள்ளிட்ட சிறப்பு வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு பறவைகளின் உலகத்தைப் போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த ரோஜா கண்காட்சி, இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு வரும் 18ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago