Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடருமா அல்லது கைவிடுமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் (SZ-NGT) உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னை மெரினா கடலில் ரூ.80 கோடி மதிப்பில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இந்தத் திட்டத்திற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. மேலும், கடலுக்குள் சுமார் 360 மீட்டர் நீள கண்ணாடி நடைபாலம் அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் கடல்வளம், சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நாம் தமிழர் கட்சி, அதிமுக மற்றும் பல்வேறு மீனவர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன.

இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன் மற்றும் பாரதி ஆகியோர் சென்னை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, “தமிழக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறதா அல்லது கைவிடுகிறதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், “நினைவுச் சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை. அதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால், கடலுக்குள் அமைப்பது ஏன்? கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்களின் நலன் மற்றும் நினைவுச் சின்னத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியுள்ளது” என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கருத்து தெரிவித்தார்.

மேலும், இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு வரும் ஜூலை 28-ஆம் தேதிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்கி பதிலளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை பேனா நினைவுச் சின்னத்திற்கான எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையே ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவுள்ள அதிகாரப்பூர்வ பதிலுக்குப் பிறகே, மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து இறுதி நிலை தெளிவாகும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago