திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில், அவரது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமர்ந்து வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை (PWD) மூலம் சில பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி ஒருவரே இந்தச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
யாரும் இல்லாத நேரத்தில் ஆட்சியரின் அறைக்குள் நுழைந்த அந்த இளைஞர், மாவட்ட ஆட்சியர் அமரும் பிரதான நாற்காலியில் அமர்ந்து வீடியோ பதிவு செய்து, அதை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயால் உடனடியாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசு அலுவலகத்தின் மாண்பையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
